ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தவர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது!! (வீடியோ படங்கள்)
மோட்டார் சைக்கிளில் 20 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்திய சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (3) இரவு மட்டக்களப்பு வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்முனை பகுதியை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதிக்கு குறித்த போதைப்பொருளை கடத்தி செல்வதற்காக தயாராக இருந்த வேளை அம்பாறை மாவட்டம் கல்முனை கடற்கரைப்பள்ளி அருகில் உள்ள மைதானத்தில் வைத்து சந்தேக நபர் கைதானார்.
இவ்வாறு கைதான சந்தேக நபரிடம் இருந்து இரு கைத்தொலைபேசிகள் பொதி செய்யப்பட்ட 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர் சேனாதீரவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் எச்.ஜி.பி.கே நிசங்க உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட்களான பண்டார (13443) ,வீரகோன் (33354) பொலிஸ் கன்ஸ்டபிள்களான நிமேஸ் (90699), ராஜபக்ஸ(24812) வாகனச்சாரதி டபிள்யு.எம் குணபால (19401) அதிகாரிகள் மற்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்தே இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.
இதன் போது குறித்த சந்தேக நபரிடமிருந்து போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்காக வாழைச்சேனை காகித புலனாய்வு அதிகாரிகள் அழைப்பை ஏற்படுத்திய பின்னர்
குறிப்பிட்ட இடமொன்றிற்கு வரவழைத்ததுடன் அவ்விடத்தில் மாறுவேடத்தில் சென்ற கல்முனை விசேட அதிரடிப்படையினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் கல்முனை பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”