ரூ.19 கோடி பெறுமதியான தங்கநகை, நாணயம் மீட்பு !!
19 கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள், தங்க பிஸ்கட்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களுடன் இரண்டு இந்திய பிரஜைகளும் இலங்கையர் ஒருவரும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என, விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று (03) இரவு டுபாயில் இருந்தும் இன்று (04) அதிகாலை புது டெல்லியில் இருந்தும் வருகை தந்த விமானங்களிலேயே சந்தேகநபர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 8.5 கிலோகிராம் தங்க நகைகள், இரண்டு பாதிகளாக்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகள், 75,000 அமெரிக்க டொலர் மற்றும் 18,000 யூரோ இருப்பது கண்டறியப்பட்டது.
மூவரும் தங்களது ஆடைகளில் பொருட்களை மறைத்து வைத்திருந்ததாகவும், அவர்கள் அணிந்திருந்த காலணிகளில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு இருந்ததாகவும் சுங்கப்பிரிவினர் தெரிவித்தனர்.
42 மற்றும் 53 வயதுடைய இந்தியர்கள், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தங்கம் மற்றும் நாணயக் கடத்தல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் 46 வயதான இலங்கையர் வர்த்தக நோக்கத்துக்காக அடிக்கடி வெளிநாட்டு விஜயங்களில் ஈடுபடும் நபர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், மூன்று நபர்களுக்கும் தலா 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.