நில ஆக்கிரமிப்பை தடுத்த பெண் உயிரோடு எரிப்பு- வலியால் கதறுவதை வீடியோ எடுத்த கும்பல்..!!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடியினப் பெண் ஒருவரை, நில அபகரிப்பாளர்கள் எரித்துக்கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குணா மாவட்டத்தில் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது. குணா மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ராம்பியாரி சகாரியா (வயது 38) என்ற பெண்ணின் குடும்பத்திற்கு, அரசு நலத்திட்டத்தின்கீழ் நிலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிலத்தை மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளனர். பின்னர் சமீபத்தில் அந்த நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டு சகாரியாவின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ராம்பியாரி சகாரியா, தனது நிலத்தில் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடினார். அப்போது அங்கு சென்ற அவரது கணவர் அர்ஜூன் சகாரியா, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 3 பேர் சேர்ந்து தன்னை எரித்துக்கொல்ல முயன்றதாக கணவரிடம் ராம்பியாரி கூறி உள்ளார். இதுதொடர்பாக பிரதாப், ஹனுமத், ஷியாம் கிரார் ஆகியோர் மீது ராம்பியாரியின் கணவர் அர்ஜூன் சகாரியா புகார் அளித்துள்ளார். தன் மனைவியைத் தேடி நிலத்திற்கு சென்றபோது, பிரதாப், ஹனுமத், ஷியாம் கிரார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் டிராக்டரில் ஏறிச் சென்றதாக புகார் மனுவில் கூறி உள்ளார். மேலும், தன் மனைவி துடிப்பதை அந்த 3 பேரும்வீடியோ எடுத்ததாகவும், அது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டதாகவும் போலீசாரிடம் கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, 2 பேரை கைது செய்துள்ளனர்.