குஜராத் கிச்சடியை விரும்பி சாப்பிட்டு உணவு சமைத்த பெண்ணை பாராட்டிய மோடி..!!
ஐதராபாத்தில் பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. ஐதராபாத் நோவோட்டல் நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த செயற்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகள், மூத்த நிர்வாகிகள், மாநில பா.ஜனதா தலைவர்கள், பா.ஜனதா ஆளும் மாநில முதல்-மந்திரிகள் என மொத்தம் 348 முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்காக தெலுங்கானாவில் புகழ்பெற்ற உணவு வகைகள் சமைக்கப்பட்டிருந்தன. தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்த யாதம்மா என்ற பெண் சமையல் கலைஞர் சுமார் 50 வகையான உணவு வகைகளை தயார் செய்திருந்தார். கோவக்காய் துருவிய தேங்காய் வறுவல், வெண்டைக்காய் முந்திரி வறுவல், தோட்டக்கீரை-தக்காளி வறுவல், வெந்தயக் கீரை-பாசிபருப்பு கூட்டு, கங்குபாய் குழம்பு, மாங்காய் சாம்பார், பருப்பு கடையல், பச்சி புலுசு, பகாராரைஸ், புளியோதரை, புதினா சாதம், கோங்குரா பச்சடி, ஆவக்காய் ஊறுகாய், தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, சுரக்காய் சட்னி, சர்க்கரை பொங்கல், சேமியா பாயாசம், அதிரசம், இனிப்பு பணியாரம், பாசிப்பருப்பு வடை, சக்கினாலு, மக்கே கூனாலு, சர்வபிண்டி உள்ளிட்ட உணவு வகைகள் இடம்பெற்றிருந்தன. இந்த உணவு வகைகளை பிரதமர் மோடி நேரில் சென்று பார்த்தார். பின்னர் குஜராத் ஸ்டைல் கிச்சடியை அவர் மிகவும் விரும்பி ருசித்து சாப்பிட்டார். மேலும் சில தெலுங்கானா உணவுகளை பிரதமர் மோடி ருசி பார்த்தார். பின்னர் உணவுகளை தயார் செய்த யாதம்மாவை அவர் வெகுவாக பாராட்டினார். இதுபற்றி யாதம்மா கூறுகையில், ‘பிரதமர் மோடி பாராட்டியதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது’ என்றார். பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தையொட்டி தெலுங்கானா மாநில பா.ஜனதா கட்சியினர் தங்கள் பலத்தை காட்ட ஐதராபாத் விமான நிலையம் முதல், செயற்குழு கூட்டம் நடைபெற்ற நோவோட்டல் வரையும், அங்கிருந்து பொதுக்கூட்ட மேடை வரையும் சாலையின் இருபுறமும் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களின் பலரது பேனர்கள், கட்அவுட்டுகள், போஸ்டர்கள் வைத்திருந்தனர். கட்சி கொடிகளையும் பறக்கவிட்டிருந்தனர். இந்த பேனர் கட்அவுட்டுகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும், அவற்றை அகற்ற வேண்டும் என்றும் ஐதராபாத் மாநகராட்சி கமிஷனருக்கு சமூக வலைதளங்கள் மூலம் பலர் புகார் அளித்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் பேனர், கட் அவுட் வைத்தது தொடர்பாக பா.ஜனதா கட்சிக்கு ரூ.23 லட்சம் அபராதம் விதித்தனர். அதேநேரத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்காவும் ஆதரவு திரட்ட கடந்த 2-ந்தேதி ஐதராபாத் வந்திருந்தார். அவரை வரவேற்று தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி சார்பில் பேனர், கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த கட்சிக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.3 லட்சம் அபராதம் விதித்தனர்.