பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் நாட்டை வழிநடத்தும் போது, புதிய பாரதம் உருவாக்கும்- பிரதமர் மோடி..!!
சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது பிறந்த நாள் விழாவையொட்டி பீமாவரத்தில் அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயரமுள்ள வெண்கலச் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அப்போது பேசிய பிரதமர், சீதாராம ராஜுவின் 125-வது பிறந்த நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என்றார். சுதந்திரப் போராட்டம் என்பது சில வருடங்கள், சில பிரதேசங்கள் அல்லது சில மக்களின் வரலாறு மட்டுமல்ல, நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் எழுந்த தியாகங்களின் வரலாறு என்று பிரதமர் குறிப்பிட்டார். அல்லூரி சீதாராம ராஜு ஆதிவாசிகள் நலனுக்காகவும், நாட்டிற்காகவும் தன்னை அர்ப்பணித்தததாகவும், இந்தியாவின் கலாச்சாரமாக, ஆதிவாசிகளின் அடையாளமாக மற்றும் மதிப்புகளின் சின்னமாக அவர் இருந்தார் என்றும் அவர் கூறினார். நமது இளைஞர்கள், பழங்குடியினர், பெண்கள், தலித் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நாட்டை வழிநடத்தும் போது, புதிய பாரதம் உருவாக்குவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். சுதந்திரப் போராட்டத்தில் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்தது போல், இப்போது நாட்டின் கனவுகளை நனவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று, பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
இதைத் தொடர்ந்து ஆந்திராவை சேர்ந்த மறைந்த சுதந்திர போராட்ட வீரர் பசல கிருஷ்ண மூர்த்தியின் மகள் பசல கிருஷ்ண பாரதியை (வயது 90) சந்தித்த பிரதமர் அவரது காலைத்தொட்டு வணங்கினார். பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தார்.