;
Athirady Tamil News

அடுத்த 4 ஆண்டுகளில் 300 பில்லியன் டாலர் மதிப்பில் மின்னணு பொருட்கள் உற்பத்திக்கு இலக்கு- பிரதமர் மோடி..!!

0

புதிய இந்தியாவுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குதல் என்ற தலைப்பில் குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி, டிஜிட்டல் இந்தியா வாரம் திட்டத்தை தொடங்கி வைத்தார். டிஜிட்டல் இந்தியா பாஷினி, டிஜிட்டல் இந்தியா ஜெனிசிஸ் மற்றும் இந்தியா ஸ்டேக். குளோபல் ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைத்தார் என்னுடைய திட்டம் மற்றும் என்னுடைய அடையாளம் என்ற இணைய தளத்தையும் மக்கள் பயன்பாட்டிற்கு பிரதமர் அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா இயக்கம், பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.


நான்காவது தொழிற்புரட்சியில் உலகிற்கு இந்தியா வழிகாட்டுவதாக பெருமையுடன் நாம் கூறமுடியும் என்று அவர் தெரிவித்தார். இதில் குஜராத் மாநிலம் முன்னணியில் உள்ளதாக பிரதமர் பாராட்டினார். பிறப்பு சான்றிதழ் பெறுவது, ரசீது தொகை செலுத்துதல், மாணவர் சேர்க்கை, தேர்வு முடிவுகள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் போன்றவற்றை ஆன் லைன் மூலம் மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் இந்த சேவைகள் சாதாரண மக்களும் மிகவும் எளிதில் அணுகக் கூடியதாக மாற்றப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் கடந்த எட்டு ஆண்டுகளில் 23 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். கொரோனா தொற்று காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும், ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை மூலம் 80 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 300 பில்லியன் டாலர் மதிப்பிற்குமேல் மின்னணு பொருட்களை உற்பத்தி செய்யும் வகையில் இந்தியா இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.