மரணத்தின் விளிம்பில் இலங்கை: ஸ்டீவ் ஹான்கே தெரிவிப்பு !!
மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை சமீபத்திய காலங்களில் சந்தித்து வருவதாகவும், இலங்கையின் பணவீக்கத்தை அவதானிக்கும் போது நாட்டின் பொருளாதாரமானது மரணத்தின் விளிம்பில் இலங்கையை கொண்டு சென்றுள்ளது எனவும் அமெரிக்க பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பணவீக்கம் தற்போது 122 வீதமாக உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், சர்வதேச நாணய நிதியம் கூட இலங்கைக்கான கடன் முறையை நிராகரித்துள்ளது என்றும் கூறியுளளார். இதுவரை காலமாக சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை 16 வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
ஆனால் இலங்கை அதிகாரிகள் எவரும் அந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அவதானிப்பின் படி வருடமொன்றுக்கு அதிக பணவீக்கம் விகிதம் பதிவாகிய நாடுகளின் பணவீக்க பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது.
சிம்பாபேவேவின் மிக மோசமான பணவீக்க நிலைமைகளுக்கு அடுத்த படியாக இலங்கை 122 வீத பணவீக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் காலங்களில் மிக மோசமான நிலைமைகளுக்கு இலங்கை முகங்கொடுக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.