எரிபொருள் இன்மையால் பாய்மர படகில் மீன்பிடி !!
எரிபொருள் இன்மையால் கிளிநொச்சி மீனவர்கள் பலர் பண்டைய காலத்து முறைப்படி, பாய்மர படகுத் தொழில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
என்னும், இதன்மூலம் சொற்ப அளவு வருமானத்தை மாத்திரமே பெற முடிவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமது படகுகளில் பெட்சீட், சாறி மற்றும் பலமான துணியைக் கட்டி, கரையோர கடற்றொழிலில் ஈடுப்பட ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கும் அவர்கள், தமது கடலில் தம் கண்முன்னே இந்திய இழுவைப் படகுகள் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சியில் கடற்றொழில் ஈடுப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான கடற்றொழிலாளர்கள் எரிபொருள் இன்மையால் தம் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
பூநகரி, பளை மற்றும் கண்டாவளையைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தங்களின் தொழில் நடவடிக்கைகளுக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் பலரின் கவனத்துக்குக் கொண்டு சென்ற போதும் இதுவரை எவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்த மீனவர்கள், இனியும் பொறுப்பு வாய்ந்தவர்களை நம்பி எரிபொருளுக்காக காத்திருந்தால் தமது குடும்பங்கள் உணவுக்கே வழியில்லாத நிலைமை ஏற்படுமென அங்கலாய்த்தனர்.
எனவேதான், தாம் பண்டைய காலத்து மீன்பிடி முறைமைக்கு மாறியதாகவும் கிளிநொச்சி மீனவர்கள் தெரிவித்தனர்