எட்டி உதைத்த அதிகாரி இடைநிறுத்தம் !!
குருநாகல், யக்கபிட்டியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகன் ஒருவரை எட்டி உதைத்த இராணுவ அதிகாரி அனைத்து கடமைகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் இன்று (05) தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முடியும் வரை லெப்டினன்ட் கேணல் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
5 பேர் கொண்ட விசாரணை நீதிமன்றத்தின் பரிந்துரைகள் வரும் வரை குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரி அனைத்துப் பணிகளில் இருந்தும் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இராணுவ அதிகாரி ஒருவர், பொதுமகன் ஒருவரை எட்டி உதைத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஒரு குழு நிலையத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அதிகாரிகளின் கூற்றுப்படி தெரியவந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
பணியில் ஈடுபட்டிருந்த இராணுவம் மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு வேண்டுமென்றே எரிபொருள் நிலையத்தில் அமைதியின்மையை உருவாக்கி மோதலுக்கு அழைப்பு விடுத்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் என்றும் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.