;
Athirady Tamil News

ஒன்றுபடாவிட்டால் நாடு அழிந்துவிடும்: சஜித் !!

0

கடந்த 3 வருடங்களில் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் மற்றவர்கள் சொல்வதைக் காதில் வாங்காமல், தாங்கள் தான் சரி என்று எண்ணிச் செயற்பட்டார்கள், அதன் விளைவாக இன்று நாடு பெரும் பாதாளத்தில் வீழ்ந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சர்வாதிகார தன்மையில் செயற்படாது, அனைவரது கருத்துக்களுக்கும் செவிசாய்க்கும் சமூக சீர்திருத்தத்தின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும், அதற்காக முற்போக்குக் கட்சிகளின் முன்மொழிவுகளையும் யோசனைகளையும் தான் செவிமடுப்பதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதே எமது நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

பன்முகப்படுத்தப்பட்ட யோசனைகளை ஒன்றிணைக்கக்கூடிய பொதுவான தேசிய நிகழ்ச்சி நிரலின் மூலமாக இப்போது எமது மக்கள் இழந்துள்ள அனைத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், மக்கள் இழந்துள்ள மூச்சை மீண்டும் பெற்றுக்கொடுக்க தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர், சகல தரப்பும் இந்த முயற்சிக்கு கைகொடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான “தேசிய சீர்திருத்தங்கள் மற்றும் முன்னோக்கிப் பயணம்” வேலைத்திட்டத்தின் கூட்டமொன்று நேற்று (04) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதஸ , ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், சி.விக்னேஸ்வரன், பி. திகாம்பரம் உள்ளிட்ட சிலரும், விக்டர் ஐவன், ஜனரஞ்சன, காமினி வியங்கொட, ரொஹான் சமரஜீவ உட்பட சிவில் செயற்பாட்டாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.