நான் குற்றவாளி அல்ல – சிறிசேன!!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் நான் குற்றவாளி என்பதனை எங்கேயும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், அது தொடர்பான குற்றச்சாட்டுகளை தான் நிராகரிக்கின்றேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (5) உரையாற்றும் போது, மனுஷ நாணயக்கார உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில்,
குற்றவாளி என்று குறிப்பிடப்பட்டுள்ள நபருடன் எப்படி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பை நடத்தியுள்ளார் என்றும், அவருடன் எப்படி இணைந்து செயற்படப் போகின்றார் என்று வெளியிட்ட கருத்து தொடர்பில் பதிலளித்து உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
நாங்கள் 6 மாதங்களுக்கு முன்னர் இருந்தே ஜனாதிபதியுடன் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கலந்துரையாடி சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு கோரிக்கை விடுத்தோம். அந்த அரசாங்கத்தில் பொறுப்பை ஏற்க நாங்கள் தயார் என்றும் கூறப்பட்டது.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவினர் அறிக்கையின்படி வழக்கு தொடர்வதென்றால் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அதனை செய்ய முடியும். எனக்கு எதிராக ஏற்கனவே 8 மனித உரிமைகள் வழகுகள் உயர்நீதிமன்றத்தில் உள்ளன. அதேபோன்று பாதிக்கப்பட்ட தரப்பினரால் என்னிடமும், முன்னாள் பிரதமர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்டோரிடம் நஷ்ட ஈடுகோரி 400 வரையிலான வழக்குகளும் உள்ளன.
இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவை நானே அமைத்தேன். அந்த பரிந்துரையில் அந்த தாக்குதல் நடக்கும் என்று எனக்கு தெரியும் என்று நினைப்பதாகவே அவர்கள் கூறியுள்ளனர்.
இதன்படி அந்த ஆணைக்குழுவினால் வழக்கு தொடுக்க வேண்டும். ஆனால் அது தொடர்பில் வழக்கு தொடுக்கவில்லை. இதனால் இதில் நான் குற்றவாளி என்பதனை எங்கேயும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அதனை நிராகரிக்கின்றேன் என்றார்.