யாழ்.போதனா வைத்தியசாலை இரத்தவங்கியில் குருதிக்குத் தட்டுப்பாடு!!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிராந்திய இரத்த வங்கியானது வடமாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேவையான குருதியை விநியோகிக்கும் பாரிய பொறுப்பைக் கொண்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக நோயாளர்களுக்குத் தேவையான குருதியையும், குருதியின் கூறுகளையும் விநியோகிக்க முடியாத நிலைக்கு மேற்படி இரத்த வங்கி தள்ளப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குருதிமாற்றுப் பிரயோக சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இரத்த வங்கிகளிலும் இரத்ததான முகாம்களிலும் இரத்ததானம் செய்யும் குருதிக்கொடையாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், இரத்த வங்கிகளில் எல்லா வகையான குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிராந்திய இரத்த வங்கியிலும் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது.
தினமும் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையான காலப் பகுதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவிற்கு குருதிக் கொடையாளர்கள் வருகை தந்து இரத்ததானம் வழங்க முடியும். இரத்ததானம் வழங்க ஆர்வமுள்ள குருதிக் கொடையாளர்களும், இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து நடாத்த விரும்புவோரும் 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் இரத்தவங்கிப் பிரிவினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”