வவுனியாவில் கிராம அலுவலர் ஊடாக எரிபொருள் அட்டை வழங்க நடவடிக்கை!! (படங்கள்)
வவுனியாவில் கிராம அலுவலர் ஊடாக எரிபொருள் அட்டை வழங்க நடவடிக்கை: மாவட்ட பொது மக்கள் அமைப்பினருடனான கலந்துரையாடலின் போது அரச அதிபர் உறுதி
வவுனியா மாவட்டத்தில் கிராம அலுவலர் ஊடாக எரிபொருள் அட்டை வழங்கி நெருக்கடி நிலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் பெற்றுக் கொள்வதில் உள்ள நெருக்கடி நிலை மற்றும் எரிபொருள் மாபியாக்களின் செயற்பாட்டை கட்டுப்படுத்தல் தொடர்பில் வவுனியா மாவட்ட மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், இராணுவ, பொலிஸ் மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று மாவட்ட அரச அதிபர் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (06.07) பிற்பகல் இடம்பெற்றது.
இதன்போது எரிபொருள் பெறுவதில் உள்ள நெருக்கடி நிலை மற்றும் அது தேவையானவர்களுக்கு முறையாக பங்கீடு செய்யப்படாமை தொடர்பில் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மாவட்ட அரச அதிபர் மற்றும் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியிருந்தனர். அத்துடன் கறுப்பு சந்தை உருவாக்கம் குறித்தும் அதனை கட்டுப்படுத்த வேண்டிய தேவை குறித்தும் தெளிவுபடுத்தியிருந்தனர்.
மேலும், சிறுபோக நெற் செய்கை அறுவடைக்கு தேவையான டீசலை பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும், அத்தியாவசிய தேவையின்றி கனரக வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனப்போது, மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், சிலேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், இராணுவ அதிகாரிகள், வவுனியா பிரதேச செயலாளாப் ஆகியோரும் தமது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.
குறித்த கூட்டத்தில் பொது மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு அமைவாக பிரதேச செயலகம் மற்றும் கிராம அலுவலர்கள் ஊடாக எரிபொருள் அட்டையினை முதல் கட்டமாக குடும்பத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் விநியோகித்து, தேவையின் அளவை கொண்டு அவர்களுக்கு தேவையான பெற்றோலை கிராம அலுவலரின் சிபார்சின் அடிப்படையில் வழங்க தீர்மானிக்கபட்டுள்ளது. இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுப் கொள்ள முடிவதுடன், அனைவருக்கும் பங்கீடு செய்யக் கூடிய நிலை உருவாகும். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிக வாகனங்கள் நிறுத்தப்படுவதை குறைக்க முடிவதுடன், கறுப்பு சந்தை வியாபாரத்தை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இதனை ஆராய்ந்த அதிகாரிகள் உடனடியாக பிரதேச செயலகங்கள் மூலம் கிராம அலுவலர்கள் ஊடாக பொது மக்களுக்கு எரிபொருள் அட்டை வழங்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட அரச அதிபர் உறுதியளித்தார்.
குறித்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட மக்கள் அமைப்பின் சார்பில் விவசாய சங்க பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகள், புகைப்படப் பிடிப்பாளர் சங்க பிரதிநிதிகள், பிரதேசசபைகளின் தவிசாளர்கள், ஊடக அமைப்பு பிரதிநிதிகள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.