காரைநகர் வீதி மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது!! (படங்கள்)
காரைநகரில் இடம்பெற்ற வீதி மறிப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது, வாகனங்களின் போக்குவரத்துக்கள் வழமைக்கு திரும்பியுள்ளன.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுடன் பிரதேச செயலகம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் கலந்துரையாடி, வரிசையில் உள்ள வாகனங்களின் இலக்கங்களைப் பதிவு செய்து பம்பி திருத்தப்பட்ட பின்னர் உரிய ஒழுங்கின் அடிப்படையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வழி வகை செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
பின்னணி
காரைநகர் – வலந்தலை சந்தியில் உள்ள ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் பொறுமை இழந்து நேற்றும் இன்றும் வீதி மறியல் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த சில தினங்களாக பெட்ரோலுக்காக பொதுமக்கள் காத்திருந்த நிலையில் , நேற்றைய தினம் புதன்கிழமை பெட்ரோல் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்திருந்தது.
சில மணி நேரம் எரிபொருளை விநியோகித்த நிலையில் திடீரென விநியோக பம்பி பழுதடைந்து விட்டதாக கூறி எரிபொருள் விநியோகத்தை நிறுத்தினர்.
அதனால் ஆத்திரமுற்ற மக்கள் நேற்றைய தினம் முதல் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், பழுதடைந்த எரிபொருள் விநியோகப் பம்பியைத் திருத்துவதற்காக அநுராதபுரத்தில் இருந்து வரவேண்டிய பணியாளர்கள் இதுவரை அங்கிருந்து புறப்படவில்லை, அவர்களை வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன, வந்து பம்பி திருத்தப்பட்டவுடன் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.
24 மணித்தியாலங்கள் கடந்த நிலையில் பம்பியைத் திருத்தி எரிபொருள் விநியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய மக்கள் இன்றைய தினம் வியாழக்கிழமையும் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தால் காரைநகருக்கும் வெளி இடங்களுக்குமான போக்குவரத்துக்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையிலையே பிரதேச செயலரின் உறுதி மொழியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”