பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா..!!
பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. சமீபத்தில் கட்சியின் துணை கொறடா கிறிஸ் பின்ஷர் மீதான பாலியல் அத்துமீறல் புகாரை போரிஸ் ஜான்சன் முறையாக கையாளவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் தொடர்ச்சியாக அரசின் மீது அதிருப்தி மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 2 நாட்களில் மட்டும் முக்கிய துறைகளின் அமைச்சர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அமைச்சரவையில் இருந்து வெளியேறினர். பெரும்பான்மை ஆதரவை இழந்ததால் போரிஸ் ஜான்சன் பதவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் போரிஸ் ஜான்சன், கட்சியின் தலைவர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஏதுவாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த போரிஸ் ஜான்சன், புதிய தலைவருக்கு தன்னால் இயன்ற ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார். ஆளுங்கட்சியான பழமைவாத கட்சியின் மாநாட்டை அக்டோபரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த மாநாட்டின் போது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதுவரை போரிஸ் ஜான்சன் பிரதமராக நீடிப்பார்.