ஐ.எம்.எப் உதவி செய்யாது – கிரியல்ல!!
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்வதில் பிரச்சனை என எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியல்ல எம்.பி தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், பிணைமுறி விவகாரம் தொடர்பில் அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ராஜபக்ஷக்கள் மூவரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதோடு கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வெவ்வேறு நாடுகளில் சொத்துக்களாக ராஜபக்ஷக்கள் சேர்த்து வைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்குவதில் பிரச்சனை காணப்படுவதாகவும் லக்ஷ்மன் கிரியல்ல கூறினார்.
வெனிசுலாவிலும் இதே போன்ற பிரச்சினை ஒன்று ஏற்பட்டதாகவும் இதனால் சர்வதேச நாணய நிதியம் அவர்களுக்கு வழங்க வேண்டிய உதவிகளை பல ஆண்டுகளாக நிராகரித்து வந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் ஜனநாயகத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதுபோல இலங்கை மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறினார்.
சர்வதேசத்தின் உதவிகளைப் பெற வேண்டுமென்றால் சர்வதேசத்துடன் சுமூகமான உறவு காணப்பட வேண்டும் எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கும் சர்வதேசத்திற்கும் சுமுகமான உறவு இல்லை. குறிப்பாக ஜனாதிபதி பதவியேற்று 6 மாதங்களுக்குள்ளேயே இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்றை சர்வதேச நாடுகள் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் கொண்டு வந்தது. வழமையாக இலங்கைக்கு ஆதரவளிக்கும் இஸ்லாமிய நாடுகள் கூட இந்த பிரேரணைக்கு ஆதரவளிக்கவில்லை என்றார்.