9 சனிக்கு முழு ஆதரவு: சஜித் அணி !!
ஜனாதிபதிக்கு எதிராக நாளை (09) நடைபெறும் போராட்டத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி முழு ஆதரவையும் வழங்கும் என தெரிவித்த அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, தனிப்பட்ட கட்சியின் நிகழ்ச்சி நிரலையோ அல்லது கட்சிக்கான விளம்பரங்களையோ இந்தப் போராட்டத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்காது, தங்களது ஆதரவை வழங்கும் எனவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுகருத்து தெரிவித்த அவர், ராஜபக்ஷர்களை ரணில் பாதுகாத்தார். எனினும், தற்போது ரணிலை பிரதமர் பதவியில் இருந்து அகற்றுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை பசில் ராஜபக்ஷவை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இன்னும் இரு வாரங்களில் இந்த அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்ற போவதாகவும் ஜனாதிபதி மாளிகை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது சேற்று தண்ணீரை வீசி அடித்ததோடு, அதிகளவான கண்ணீர் புகை பிரயோகமும் 6ஆம் திகதி புதன்கிழமையே மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்ட தனக்கும் கால்கள் இரண்டிலும் காயம் படுமளவுக்கு நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர் புகை பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஹிருணிக்கா மீது புதுவிதமான பயம் காணப்படுகிறது. ஹிருனிகாவை பார்த்தாலே ஜனாதிபதி பயந்து ஓடுகிறார். நாட்டில் உள்ள அனைத்து மக்களும் அனாதரவாகியுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ மீதான நம்பிக்கை ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் தற்போது இல்லை. எனவே ஜனாதிபதி பதவியில் கோட்டா இருக்கும் வரையில் எந்த அர்ப்பணிப்பையும் செய்ய மக்கள் தயாராக இல்லை. அதுபோல நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாது சர்வதேசமோ அல்லது சர்வதேச நாணய நீதியமோ ஒருபோதும் இலங்கைக்கு உதவப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.
மாநாயக தேரர்கள், கார்டினல், நாட்டில் உள்ள புத்திஜீவிகள் என அனைவரும் சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றையே வலியுறுத்தி வருகிறார்கள். எனினும் இந்த சர்வ கட்சி அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமாரர் திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இணைந்து கொள்ளவில்லை என்றால் அல்லது நிராகரிக்குமாக இருந்தால் அது பாரிய பிரச்சனையாகி விடும் எனவும் தெரிவித்தார்.