இலாப நோக்கில் மக்கள் மீது அதிக சுமை சுமத்தப்படுவதை ஏற்க முடியாது – இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு!!
எரிபொருள் விலையேற்றம் முரண்பட்ட தன்மையில் உள்ளது. இலாபம் பெறும் நோக்கத்திற்காக மக்கள் மீது அதிக சுமை சுமத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற காரணத்தினால் நாட்டு பிரஜை என்ற ரீதியில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளேன் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் காரியாலயத்தில் 07 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எரிபொருள் விலை கடந்த ஒன்றரை மாதகாலப்பகுதியில் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து சிக்கல் நிலை காணப்படுகிறது.
நாட்டின் மின்கட்டமைப்பு தொடர்பிலான தீர்மானங்களை முன்னெடுக்கும் அதிகாரம் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு உள்ள காரணத்தினால் எரிபொருள் விலையேற்றம் குறித்து அதிக அவதானம் செலுத்தியுள்ளோம்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் கடந்த இரண்டு மாதகாலமாக இறக்குமதி செய்த எரிபொருள் தொடர்பிலான தரவுகளை முழுமையாக பரிசீலனை செய்து கடந்த ஒன்றரை மாத காலப்பகுதியில் எரிபொருள் விலையேற்றம் முறையற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒரு லீட்டர் 92 ஒக்டேன் ரக பெற்றோல் இறக்குமதிக்கு சுங்க வரி அடங்கலாக 298 ரூபாவை செலவு செய்து,ஒரு லீற்றர் பெற்றோலை 470 ரூபாவிற்கு விற்பனை செய்கிறது.மறுபுறம் ஒரு லீட்டர் 95 ரக பெற்றோல் இறக்குமதிக்கான மொத்த செலவு 303 ரூபாவாக காணப்படும் பட்சத்தில் அதன் விலை 550 ரூபாவாக காணப்படுகிறது.
ஒடோ டீசல் இறக்குமதிக்கான செலவு 112 ரூபாவாக காணப்பட்ட போதும் விற்பனை விலை 460 ரூபாவிற்கும்,சுபர் டீசலுக்கான செலவு வரி அடங்களாக 115 ரூபாவாக காணப்பட்ட போது விற்பனை விலை வரி அடங்களாக 520 ரூபாவாக காணப்படுகிறது.
ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் இறக்குமதியின் போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 471 ருபாவை செலவிடுவதாக வலுசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை அடிப்படையற்றது. ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் இறக்குமதிக்கு 252 ரூபா மாத்திரமே செலவிடப்படுகிறது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், மின்சார சபைக்கு ஒரு லீட்டர் பேர்னஸ் எண்ணெயை 419 ரூபாவிற்கு வழங்குகிறது ஆனால் ஒரு லீட்டர் பேர்னஸ் எண்ணெய் 175 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
எரிபொருள் விலையேற்றம் முறையற்ற வகையில் காணப்படுகிறது.நிறுவனங்கள் இலாபம் பெறும் நோக்கில் மக்கள் மீது சுமை சுமத்தப்படுகிறது.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்டமடைகிறது என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எரிபொருள் விலையேற்றத்தில் உள்ள முரண்பாடான தன்மை தொடர்பில் நாட்டு பிரஜை என்ற ரீதியில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்க தீர்மானித்துள்ளேன்.
பல விடயங்களை கோப் குழுவில் முன்வைத்துள்ளேன்.எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் ஆணைக்குழு குறிப்பிட்ட விடயங்களை விமர்சிக்கும் அரசியல்வாதிகளுக்கு இவ்விடயம் தொடர்பில் தெளிவற்ற தன்மை உள்ளதை விளங்கிக்கொள்ள முடிகிறது என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”