நெருக்கடிக்கு மத்தியில் இ.போ.ச ஊழியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!!
சேவைக்கு சமூகமளிப்பதற்காக எரிபொருளை பெற்றுத் தரவில்லை என்றால் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சேவையில் இருந்து விலகுவதாக அகில இலங்கை போக்குவரத்து சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களை சேவைக்கு அழைப்பதற்காக எரிபொருள் வழங்கும் முறைமையொன்றை இன்று காலை அறிவிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இன்று மதியம் 12 மணி முதல் சேவையில் இருந்து விலகுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
அதேபோல், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பிரதேசங்களுக்கு தனியார் பேருந்துகளை இயக்காமல் இருக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, ரயில் ஊழியர்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுப்பதற்கான உரிய வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்படாவிட்டால் எதிர்காலத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரயில் பயணங்கள் ரத்துச் செய்யப்படும் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.