பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அமைச்சருக்கு அனுப்பிய கடிதம்!!
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கும் கர்ப்பிணி அரச உத்தியோகத்தர்களை அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள வேறொரு சேவை நிலையத்திற்கு பணிக்கு நியமிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கர்ப்பிணி உத்தியோகத்தர்கள் அவ்வாறு நியமிப்பதில் ஏதேனும் இடையூறுகள் காணப்படுமாயின் தமது கடமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வீட்டிலிருந்தே இணையவழியில் தமது கடமைகளை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் கேட்டுக்கொள்கின்றது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தவிசாளர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அரச அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்களை அழைப்பதை கட்டுப்படுத்துவது தொடர்பில் 17.06.2022 திகதியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கை இல. 16/2022 பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டது.
இதன்படி, குறித்த சுற்றறிக்கையின் 02ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள வேறு சேவை நிலையத்திற்கு அரச உத்தியோகத்தர்களை பணிக்கமர்த்தப்படுவது தொடர்பில் கர்ப்பிணி அரச உத்தியோகத்தர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அவ்விடயம் தொடர்பில் தனியார் துறையினருக்கும் பிரயோகித்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தவிசாளர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே விடுத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.