இலங்கை – இந்திய சரக்கு கப்பல் சேவையில் காங்கேசன்துறை துறைமுகம் முக்கிய இடம்பிடிக்கும்!! (படங்கள்)
இலங்கையின் துறைமுகங்கள் பிராந்தியத்தில் மாத்திரம் அல்ல சர்வதேச கப்பல் போக்குவரத்திலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. எனவே தான் வல்லமையான நாடுகள் இலங்கையின் துறைமுகங்கள் மீது ஆர்வத்துடன் ஒப்பந்தங்களை செய்கின்றன.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா தனது கால்தடத்தை பதித்த போது அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஹம்பாந்தோட்டை துறைமுகமானது சீனாவின் வெளிக்கள இராணுவ தளமென இலங்கையை எச்சரித்தனர். எனவே இலங்கையின் துறைமுகங்கள் குறித்து பேசும் போது இவ்வாறானதொரு நிலைமையே காணப்படுகின்றது.
விடுதலை புலிகளுக்கும் அரச படகளுக்கும் இடையிலான 30 ஆண்டுக்கால போரில் செயலிழந்து போன காங்கேசன்துறை துறைமுகத்தின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் இந்தியாவுடன் கைக்கோரித்து நடவடிக்கை எடுத்து வருகின்றது. 50 ஏக்கர் நிலப்பகுதியில் வியாபித்துள்ள காங்கேசன்துறை துறைமுகம் 70 ஆம் ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டதாகும். இது 1400 மீட்டர் அலை தாங்கியைக் கொண்டடுள்ளது.
இந்தியாவினால் வழங்கப்படும் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தியைச் செய்ய எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இலங்கை துறைமுக அதிகாரசபை பூர்வாங்க வேலைகளைச் செய்துள்ளதாகவும், எக்ஸிம் வங்கி வழங்கும் நிதி வசதியைப் பயன்படுத்தி எஞ்சிய பணிகளை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் கூறியிருந்தார். ஏவ்வாறாயினும் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான கப்பல் போக்குவரத்திற்கு காங்கேசன்துறை துறைமுகம் சிறந்த பங்களிப்பை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் வடமுனையில் அமைந்துள்ள துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் பணியில் கூடுதல் ஆர்வம் செலுத்தியுள்ளதாகவும், காங்கேசன்துறை துறைமுகத்தில் பெரிய கப்பல்கள் நிறுத்தும் வகையில் அபிவிருத்தி செய்யப்படும் என்று இந்திய தரப்புகள் அறிவித்துள்ளன.
இதனடிப்படையில் கூடிய விரைவில் இந்தியாவிற்கும் வட இலங்கைக்கும் இடையிலான சரக்கு கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்திய உதவியுடன் துறைமுகத்தை மேம்படுத்தும் பணி நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. மே, 2009 இல் போர் முடிவடைந்ததை அடுத்து, இது தொடர்பாக இந்தியா நிதி உதவி வழங்கியது, மேலும் சிதைவுகளை அகற்றுவது போன்ற சில பணிகள் அப்போது செய்யப்பட்டன என்பது நினைவூட்டத்தக்கது.
மேலும் பருத்தித்துறை, பேசாலை, குருநகர், பலம்பிட்டிய உள்ளிட்ட முக்கிய மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்யவும் இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
அதே போன்று இலங்கையின் ஏனைய துறைமுகங்களும் இந்து மா சமுத்திர கடல் போக்குவரத்தில் முக்கிய கேந்திர நிலையமாக உள்ளது. கொழும்பு துறைமுகமானது உலகில் உள்ள 370 துறைமுகங்களில் 22வது இடத்தையும், இந்து சமுத்திர பகுதியில் 3வது இடத்தையும், இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்காசியாவில் மிகவும் செயல் திறன் மிக்க துறைமுகமாகவும் உலக அமைப்புகளால் தரப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகமானது 2021 ஆம் ஆண்டில் 7.25 மில்லியன் கொள்கலன்களைக் கையாளும் திறனைக் வெளிப்படுத்தியுள்ளது.
எனவே தான் பிராந்தியத்தில் அமைவிட முக்கியத்துவம் குறித்து பல தரப்பினராலும் பேசப்படுகின்றது. கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களுக்கு அடுத்தப்படியாக காங்கேசன்துறை துறைமுகத்தினை செயல்திறன் மிக்க துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படுகின்றமை இங்கு முக்கியமானதாகும்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”