இலங்கை மின்சார சபையின் புதிய நடைமுறைகள்!
மின் கட்டணங்களை வழங்குவதில் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த, முன் அச்சிடப்பட்ட கட்டண பட்டியலை வழங்கும் முறைக்குப் பதிலாக, புதிய முறைமைகளை அறிமுகப்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்த மின் கட்டணங்களை வழங்குவதில் பின்வரும் முறைகள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thermal printed bills – ஏதேனும் காரணங்களுக்காக பற்றுச்சீட்டு தேவைப்படும் நுகர்வோருக்கு தெர்மல் பிரின்டிங் முறையிலான உடனடி துண்டுச்சீட்டு வழங்கப்படும்.
SMS – மின் வாசிப்பு எடுக்கப்பட்டதன் பின், மாதாந்த மின் கட்டணம் இலங்கை மின்சார சபையில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஒரு SMS மூலம் அனுப்பப்படும்.
இதற்காக “REG இடைவௌி, பத்து இலக்கங்கள் கொண்ட உங்கள் மின்சாரக் கணக்கு எண்ணை” டைப் செய்து 1987 க்கு SMS அனுப்புவதன் மூலம் உங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.
CEBCare Mobile app – CEB Care Mobile app ஐ பயன்படுத்தி மாதாந்த மின்சார கட்டண விபரத்தை பெறலாம்.
வாடிக்கையாளர்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்கவதற்கும், நிறுவன நடவடிக்கைகளை கணினிமயப்படுத்தும் நோக்கிலும் இந்த 3 புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக மின் கட்டண விபரங்களை பெற 4 ஆவது முறையாக, மின்னஞ்சல் மூலமான பற்றுச்சீட்டை வழங்கும் வசதிகளை முன்னெடுக்க தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் காகிதத் தட்டுப்பாடு காரணமாக மின் கட்டணத்தை முன்கூட்டியே அச்சிட்டப்பட்ட பற்றுச்சீட்டு மூலம் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய முறைகளை நடைமுறைபடுத்துவதன் மூலம் செயல்திறனை அதிகரிப்பதுடன், ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை வருடாந்தம் சேமிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.