பங்கீட்டு முறை அடிப்படையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை- யாழ் அரசாங்க அதிபர்!!
எரிபொருள் நெருக்கடிகள் குறித்தும் அதனை பங்கீட்டு முறை அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க .மகேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இன்றைய தினம் யாழ் .மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே தெரிவித்திருந்தார்
அவர் மேலும் தெரிவித்ததாவது;
பொது மக்களுக்குத் தேவையான எரிபொருளினை பங்கீட்டு அட்டை மூலம் வழங்குவற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன .எரிபொருளிற்காக காத்திருக்கின்ற மக்கள் அனைவரையும் பதிவு செய்து இலக்கங்களை வழங்கி எரிபொருள் கிடைக்கின்ற நிலைமைக்கு ஏற்ப எரிபொருள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
செயலி ஒன்றினை அறிமுகப்படுத்தப்பட்டு அந்த செயலி மூலம் தங்களுடைய தேவைகளை பதிவு செய்து SMS ஊடாக எரிபொருள் வழங்க இருக்கின்ற தினத்தினையும்,நாளினையும் பெறக்கூடிய வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த செயலியினை பயன்படுத்த முடியாதவர்கள் தங்கள் கிராம உத்தியோகத்தர் ,மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஊடாக பெற்று பயன்படுத்துவதற்குரிய முன்னேற்பாடுகளும் எடுக்கப்பட்டு வருகின்றன .
பெரிதும்,சிறியதுமான தொழில் துறையில் இருப்பவர்களுக்கும் எரிபொருள் பகிர்ந்தளிக்க வேண்டி இருக்கிறது .கொள்கலனில் எரிபொருளினை பெறுவதற்கான தடை இருக்கின்ற காரணத்தினால் அதற்குரிய விஷேட ஏற்பாடுகளை இன்றிலிருந்து ஆரம்பிக்க முன்னெடுத்திருக்கின்றோம் .
தேசிய கொள்கை அடிப்படையில் தனியார் பேருந்துகளுக்கும் ,பாடசாலை சேவைக்கும் ,அத்தியாவசிய சேவைகளுக்கும் தற்போது எரிபொருள் விநியோகம் இ.போ.ச கூடாக வழங்கப்பட்டு வருகிறது .
மறு அறிவித்தல் வரை அதனூடாகவே வழங்கப்படும்.
வெளி மாவட்டங்களில் நடைமுறை பிரச்சனைகள் இருப்பதனால் அதன் நிலைமைகளை அவதானித்து எரிபொருள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எடுத்திருக்கின்றது.
வட மாகாணத்தில் தனியார் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பஸ்கள் ,அதேபோன்று இலங்கை போக்குவரத்துக்கு சபைக்குத் தேவையான சேவைகள் தற்போது இருக்கின்ற வழங்களைக் கொண்டு யாழ்ப்பாண மாவட்ட இலங்கை போக்குவரத்துச் சபையினுடைய பிராந்திய சாலைகள் அதேபோன்று ஒதுக்கீடு செய்யப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாகவும் மேற்கொள்ளவதற்கான நடவடிக்கைகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எடுத்திருக்கின்றது .
மண்ணெண்ணெய் விநியோகம் தற்போது தடைப்பட்டு உள்ளது ஏற்கனவே கிடைத்திருக்கின்ற மண்ணெண்ணையினை பங்கீட்டு அடிப்படையில் விநியோகத்திருக்கின்றோம்.
விவசாயிகளுக்கு கமநல அமைப்புக்கள் ஊடாகவும் ,மீன்பிடியாளார்களுக்கு மீன்பிடியாளர் கூட்டுறவுச்சங்கங்கள் ஊடாகவும் விநியோகித்திருந்தோம்.
தொடர்ச்சியாக வழங்கக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். தற்போது இதற்கான கோரிக்கைகளை எழுத்து மூலமாக அனுப்பி வைத்திருக்கின்றோம் இருந்தபோதும் இது சவால் மிக்கதாக உள்ளது என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”