மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலி – அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்..!!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். கடந்த 2 ஆண்டாக கொரோனா காரணமாக இந்த யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு கடந்த 30-ந்தேதி முதல் பனிலிங்க யாத்திரை மீண்டும் தொடங்கியது. ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிலிங்கத்தைத் தரிசித்து வருகின்றனர். இதற்கிடையே, இரு தினங்களுக்கு முன் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் வானிலை சீரானதும் யாத்திரை தொடங்கியது. இந்நிலையில், அமர்நாத் யாத்திரை குகை அருகே இன்று ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பால் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டியது. அங்கு அமைக்கப்பட்டிருந்த 20க்கு மேற்பட்ட முகாம்களை வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. தகவலறிந்து இந்தோ திபெத்திய போலீஸ் படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பனி நடைபெற்று வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.