எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்த வேண்டும்- பொது மக்களுக்கு மத்திய மந்திரி வேண்டுகோள்..!!
மும்பையில் நடைபெற்ற புதிய இந்தியா-புதிய தீர்வு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளதாவது: டெல்லி-மும்பை விரைவுச்சாலை உள்பட பல புதிய சாலைத் திட்டங்கள் மகாராஷ்டிரா பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். மும்பையை, டெல்லி, புனே மற்றும் பெங்களூருவுடன் இணைக்கும் சிறந்த உள்கட்டமைப்பு திட்டங்கள் தயாராகி வருகிறது. ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான தில்லி – மும்பை விரைவுச் சாலையின் 70% பணிகள் முடிவடைந்துள்ளன. இது தேசிய தலைநகர் மற்றும் வர்த்தக தலைநகர் இடையேயான பயண நேரத்தை 12 மணி நேரமாகக் குறைக்கும். பெட்ரோலுக்கு இணையான கலோரி ஃபிக் மதிப்புடன் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்த மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. பெட்ரோலில் இருந்து பெறும் சராசரி அளவை எத்தனாலில் இருந்து பெற முடியும் என்று பரிதாபாத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் சான்றளித்துள்ளது. ஃப்ளெக்ஸ் வகை எஞ்சின் வாகனங்கள் அடுத்த மாதம் முதல் கிடைக்கும் என்பதால், எதிர்காலத்தில் எத்தனாலை விருப்பமான எரிபொருளாக பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். பெட்ரோலுடன் ஒப்பிடும் போது, எத்தனால் லிட்டர் ரூ.64 –க்கு கிடைக்கும், மிகவும் செலவு குறைந்த எரிபொருளாக அது இருக்கும். எத்தனால், மெத்தனால், பயோ-டீசல், பயோ சிஎன்ஜி, பயோ எல்என்ஜி மற்றும் கிரீன் ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருட்களை ஊக்குவிப்பதன் மூலம் பெட்ரோல் பயன்பாட்டைக் குறைப்பதில் மகாராஷ்டிரா முன்னோடி மாநிலமாக முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.