அமர்நாத் திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு- 48 பேர் படுகாயம்..!!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அமர்நாத் குகையில் பனிலிங்கத்தை தரிசிக்கும் புனித யாத்திரை கடந்த 30-ந்தேதி தொடங்கியது. ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிலிங்கத்தைத் தரிசித்து வந்தனர். இரு தினங்களுக்கு முன் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் வானிலை சீரானதும் யாத்திரை தொடங்கியது.
இந்நிலையில், அமர்நாத் குகை அருகே நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு நிகழ்வால் கடும் மழை கொட்டியது. அமர்நாத் குகை கோவிலுக்கு மேலே உள்ள பகுதியில் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை 31 மிமீ மழை பெய்ததாக என்று வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் உருவான வெள்ளப்பெருக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த 20க்கு மேற்பட்ட பக்தர்களின் முகாம்களை அடித்துச் சென்றது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 48 பேர் காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலரை காணவில்லை என கூறப்படுகிறது.
அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மற்றும் சமூக சமையலறைகள் மீது மண் மற்றும் பாறைகள் விழுந்துள்ளதாக, காவல்துறை. அதிகாரிகள் தெரிவித்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன. இரவு நேரத்திலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.75 மீட்புப் பணியாளர்கள் அடங்கிய மூன்று குழுக்கள் இதில் ஈடுபட்டனர். இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை அமர்நாத் புனித யாத்திரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் மேகவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.