கணவன் கண்ணெதிரிலேயே இளம்பெண்ணை கற்பழித்த இன்ஸ்பெக்டர்..!!
தெலுங்கானா மாநிலம் தேவரகொண்டா பகுதியை சேர்ந்தவர் 35 வயது வாலிபர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஐதராபாத் வந்தார். ஐதராபாத்தில் உள்ள வனஸ்தலிபுரம் கிரெடிட் கார்டு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அவரது கார் கண்ணாடியில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததால் அவர் மீது ஐதராபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகேஸ்வரராவ் வழக்கு பதிவு செய்தார். வாலிபரை வழக்கு விசாரணைக்காக போலீஸ் நிலையம் வர வேண்டும் என கூறினார். ஆனால் வாலிபர் போலீஸ் நிலையம் செல்லாமல் இருந்து வந்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் நாகேஸ்வர ராவ் வாலிபரின் வீட்டிற்கு சென்று அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து வாலிபர் முன்பாக கஞ்சாவை வைத்து போட்டோ எடுத்து கஞ்சா விற்பனை செய்வதாக வழக்கு பதிவு செய்தார். அப்போது வாலிபரின் மனைவி போலீஸ் நிலையம் வந்து தனது கணவரை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என கெஞ்சினார். வாலிபர் மனைவியின் அழகில் மயங்கிய நாகேஸ்வர ராவ் தனது ஆசைக்கு இணைங்கினால் 2 வழக்குகளில் இருந்தும் வாலிபரை விடுவிப்பதாக தெரிவித்தார். ஆனால் அவரது ஆசைக்கு இணங்க வாலிபரின் மனைவி மறுத்தார். இதையடுத்து வாலிபரையும் அவரது மனைவியும் காரில் அழைத்து சென்று நகரத்திற்கு வெளியே உள்ள தனது கெஸ்ட் ஹவுஸில் அடைத்து வைத்து ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி வந்தார். இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் இன்ஸ்பெக்டருக்கு தெரியாமல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு பிறகு வாலிபரின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை இன்ஸ்பெக்டர் கண்டுபிடித்தார். பின்னர் வாலிபரின் மனைவிக்கு போன் செய்த இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு வருவதாக தெரிவித்தார். இதுகுறித்து வாலிபருக்கு அவரது மனைவி தகவல் தெரிவித்தார். இந்த நிலையில் வாலிபரின் வீட்டிற்கு மது போதையில் சென்ற இன்ஸ்பெக்டர் வாலிபரை சரமாரியாக தாக்கி துப்பாக்கிமுனையில் மிரட்டி அவரது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அதிகாலை வாலிபர் மற்றும் அவரது மனைவியை காரில் ஏற்றிக் கொண்டு கடத்தி சென்றார். கார் சிறிது தூரம் சென்ற போது விபத்தில் சிக்கியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட இருவரும் காரில் இருந்து தப்பி சென்று ஐதராபாத் போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள இன்ஸ்பெக்டர் நாகேஸ்வரராவை தேடி வருகின்றனர். இதற்கிடையே இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.