கண்டியில் ”கடவுச்சீட்டு” மோசடி: மூவர் சிக்கினர் !!
குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் கண்டி கிளை ஊடாக, வெளிநாட்டு கடவுச் சீட்டுகளைப் பெற வரும் இளைஞர்களிடம் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஒருநாள் மற்றும் சாதாரண விநியாகத்துக்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகக் கூறி 6,000 தொடக்கம் 50,000 ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட குறித்த அலுவலகத்தின் பணியாளர் ஒருவரும் மேலும் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கண்டி பொலிஸ் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒருநாள் மற்றும் சாதாரண சேவையாக வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் கண்டி அலுவலகம் ஊடாக விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு கடவுச்சீட்டுகளை பெற்றுவதற்காக வருவோரிடம் முன்கூட்டியே பெற்றுத்தருவதாகக் கூறி சந்தேகநபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைய, ஒரு நாள் சேவைக்காக 40,000 தொடக்கம் 50,000 வரை சந்தேகநபர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தெஹியத்தகண்டியிலிருந்து கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு வருகைத் தந்த இளைஞர் ஒருவரிடம் 25,000 ரூபாய் முற்பணம் பெற்றுக்கொண்ட போதே, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதில் குறித்த குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தில் கடமையாற்றும் இளைஞரும் ஓட்டோ சாரதியொருவரும் மாத்தளையைச் சேர்ந்த நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை முதலில் இளைஞர்கள் சிலரே பிடித்துள்ள நிலையில், அவர்களை எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல், அங்கிருந்த அதிகாரிகள் விடுவிக்க நடவடிக்கை எடுத்த போது, அங்கு கூடியிருந்த ஏனைய இளைஞர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்தே சந்தேகநபர்கள் கண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.