;
Athirady Tamil News

ஒமைக்ரானின் புதிய வகை வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது- நிபுணர்கள் தகவல்..!!

0

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. பல நாடுகளில் கொரோனா வைரஸ் பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்றெல்லாம் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. இதில் கடந்த நவம்பர் மாதம் தென்ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. ஒமைக்ரானில் பிஏ1, பிஏ2, பிஏ3, பிஏ4, பிஏ5 என்று 5 ஒமைக்ரான் உட்பிரிவு வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த 5 பிரிவுகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து வேறு புதிய குட்டி ஒமைக்ரான்களும் உருவாகி உள்ளன. இந்த ஒமைக்ரான் வைரஸ்கள் தான் தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் பரவி பாதிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. கொரோனா வைரஸ் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான பாதிப்பை ஏற்படுத்துவது ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா முதல் அலை உருவான போது பீட்டா வகை கொரோனாக்கள் மன அழுத்தம், படபடப்பு, தூக்கமின்மை போன்ற பின் விளைவுகளை ஏற்படுத்தின. கொரோனா 2-வது அலை டெல்டா வடிவத்தில் தாக்கிய பிறகு காலில் ரத்த ஓட்டம் அடைப்பு என்ற பிரச்சினை மிகப்பெரிய பின் விளைவாக உலகம் முழுக்க உள்ளது. இந்த வைரஸ் டெல்டா பிளசாக மாறி 3-வது அலையை உருவாக்கியபோது நுரையீரல் பாதிப்பு மிகப்பெரிய பிந்தைய பாதிப்பை கொடுத்தது. அந்த வகையில் ஒமைக்ரான் வைரசின் புதிய வடிவமான பிஏ2.75 வகை வைரஸ் இந்தியாவில் அதிகளவில் பரவி இருப்பதால் அது எத்தகைய பிந்தைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும் போது, “ஒமைக்ரானின் புதிய மாறுபாடான ‘பி.ஏ.2.75’ வைரஸ் பற்றி முழுமையாக இன்னும் ஆய்வு செய்யவில்லை. ஆனால் இந்த மாறுபாடு ஸ்பெக்புரத்தில் சில பிறழ்வுகள் உள்ளன” என்று தெரிவித்தது. பி.ஏ.2.75 வைரஸ் இந்தியாவிலும் சுமார் 10 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசால்தான் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறும்போது, “பி.ஏ.2.75 மாறுபாடு முந்தைய மாறுபாடுகளில் இருந்து வித்தியாசமாக தெரிகிறது. ஆனால் கடுமையான நோய் தொற்றுக்களை ஏற்படுத்துமா? என்பதை இவ்வளவு சீக்கிரத்தில் சொல்ல முடியாது என்றார். இந்த நிலையில் ஒமைக்ரான் புதிய வகை மாறுபாடு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கொரோனா பணிக்குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறியதாவது:- புதிய துணை மாறுபாடு வைரசுக்கு பரவல், தன்மை செயல் திறன் இருந்த போதிலும் பெரிய அளவில் குறிப்பிட்ட பகுதிகளில் பரவவில்லை. புதிய துணை மாறுபாடு பாதிப்பில் பெரிய அதிகரிப்பு அல்லது தீவிர நோய் அபாயத்துக்கு வழிவகுக்கவில்லை. இந்த பாதிப்புகள் ஆங்காங்கே உள்ளன. ஓரிரு மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருந்தால் கவலைப்படுவேன். இதன் மூலம் இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் அல்லது பல கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதல்ல என்பது தெரிகிறது. ஒமைக்ரான் புதிய மாறுபாட்டால் இந்தியாவில் 4-வது கொரோனா அலை வராது. தொற்று நோயின் 4-வது கட்டத்தில் இந்தியா நுழையவில்லை. ஒமைக்ரானின் 3-வது அலையின் ஒரு பகுதியாக நாம் இருக்கிறோம். தற்போதைய வைரஸ்கள் ஒமைக்ரானின் துணை வகைகள். அதை பற்றி எந்த கவலையும் கொண்டிருக்கவில்லை. இந்த துணை வகைகள் கடுமையான அல்லது தீவிரமான நோய்களை ஏற்படுத்துமா? என்பதுதான் முக்கியமானது. அதைதான் நாம் பார்க்க வேண்டும் என்றார். ஏற்கனவே ஒமைக்ரான் வைரஸ் மிகவும் வேகமாக பரவும் என்றும் ஆனால் அதனால் அதிக பாதிப்பு ஏற்படாது என்று நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.