;
Athirady Tamil News

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தேசிய சின்னம் திறப்பு- பிரதமர் மோடி குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு பாஜக பதிலடி..!!

0

தலைநகர் டெல்லியில் ரூ.971 கோடி செலவில் அதிநவீன வசதியுடன் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. வெண்கலத்தால் ஆன 6.5 மீ உயரம் உள்ள தேசிய சின்னத்தின் எடை சுமார் 9500 கிலோ ஆகும். இதை தாங்கும் வகையில் சுமார் 6500 கிலோ எடையுள்ள எஃகு தூண்கள் நான்கு புறங்களிலும் கட்டப்பட்டுள்ளன. இந்த தேசிய சின்னத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். முன்னதாக அங்கு நடைபெற்ற பூஜையிலும் அவர் கலந்து கொண்டார்.

பாராளுமன்ற கட்டிடப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் பிரதமர் உரையாடினார்.இது தொடர்பாக பிரதமர் தனது டுவிட்டர் பதிவில், புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை திறந்து வைக்கும் பெருமை எனக்கு கிடைத்தது. கட்டிடப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் உரையாடினேன். அவர்களுடைய முயற்சிகள் கண்டு நாம் பெருமை அடைகிறோம். நமது நாட்டிற்கான அவர்களின் பங்கு என்றும் நம் நினைவில் இருக்கும் என்று கூறியுள்ளார். இந்நிலையில், தேசிய சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தது தொடர்பாக, காங்கிரஸ்,மார்க்சிஸ்ட் மற்றும் ஏஐஎம்ஐஎம் போன்ற எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இது அரசியலமைப்பு மீறல் என்று அந்த கட்சிகள் கூறியுள்ளன. இதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைமை செய்தித் தொடர்பாளரும் தேசிய ஊடகப் பொறுப்பாளருமான அனில் பலுனி தெரிவித்தார்.

புதிய பாராளுமன்றத்திற்கு அடித்தளம் அமைத்தது மோடி என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் வெளியிட்டது துரதிர்ஷ்டவசமானது என்றும், அவர் குறிப்பட்டார். கட்டுமான பணிகள் முடிந்ததும், கடடிடம், பாராளுமன்ற நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார். திறப்பு விழாவை கேள்வி கேட்கும் எதிர்க்கட்சிகள், நிர்வாக செயல்முறையை புரிந்து கொள்ள வேண்டும் என்றும், பாராளுமன்றத்தின் வடிவமைப்பு முதல் நிதி மற்றும் கட்டுமான மேற்பார்வை வரை, முழு வேலைகளும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் வரம்பிற்கு உட்பட்டது என்றும் பலூனி குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.