குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் பலத்த மழைக்கு 18 பேர் பலி..!!
வடமாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பலத்த மழைக்கு 18 பேர் பலியாகி உள்ளனர். குஜராத் மாநிலத்தில் இம்மாத தொடக்கம் முதலே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழைக்கு 6 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 69 ஆக உயர்ந்தது. சில நாட்களாக தெற்கு குஜராத்தில் மழை பெய்து வருகிறது. சவுராஷ்டிரா பகுதியில் உள்ள கட்ச், ராஜ்கோட் பகுதிகளில் தொடர் கனமழை பெய்கிறது. கட்ச்சில் உள்ள அஞ்சார் தாலுகாவில் 6 மணி நேரத்தில் 16.7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. காந்திதாம் தாலுக்காவில் 14.5 செ.மீ. மழை பெய்தது. பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. மழை காரணமாக குஜராத்தின் சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழைக்கு 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகி உள்ளனர். மும்பை புறநகர் பகுதியில் கட்டிடம் இடிந்து 2 பேர் உயிரிழந்தனர். நாக்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டதில் 3 பேர் பலியானார்கள். புனே மாவட்டத்தில் பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் இறந்தனர். பால்கர் மாவட்டத்தின் வசாய் நகரில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய 2 பேர் மீட்கப்பட்டனர். 3 பேரை மீட்கும் முயற்சி நடக்கிறது. தேசிய பேரிடர் மீட்பு படையின் 13 குழுக்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணியில் ஈடுபடுகிறார்கள். நாசிக், பால்கர் மற்றும் புனே மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் மழை காரணமாக போபால், இந்தூர், ஜாபல்பூர் உள்பட 33 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் சில பகுதிகளில் இன்று காலை லேசான மழை பெய்தது. அங்கு அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.