பாகிஸ்தான் பத்திரிக்கையாளரை இந்தியாவுக்கு அழைத்தார்- ஹமீது அன்சாரி மீது பாஜக குற்றச்சாட்டு..!!
குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஹமீது அன்சாரி பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் நுஸ்ரத் மிர்சாவை சந்தித்ததாகவும், அவரை இந்தியாவுக்கு வருமாறு அழைத்ததாகவும் பாஜக குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் நுஸ்ரத் மிர்சா ஐந்து முறை இந்தியாவுக்கு வந்து, நாட்டின் முக்கியமான தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு அனுப்பியதாக அவரே தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அப்போது குடியரசு துணைத் தலைவராக இருந்த ஹமீது அன்சாரியின் அழைப்பின் பேரில் தான், இந்தியாவுக்கு வந்து அவரைச் சந்தித்ததாக மிர்சா கூறியுள்ளதாகவும் கௌரவ் பாட்டியா தெரிவித்தார். இது டெல்லி அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பாஜக குற்றச்சாட்டை ஹமீது அன்சாரி மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.என் மீது ஒரு பொய் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்றும், நுஸ்ரத் மிர்சாவை நான் சந்திக்கவோ அல்லது அழைக்கவோ இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஹமீது அன்சாரி குறித்த பாஜகவின் குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரும் அவரது கட்சி சகாக்களும் பொதுமக்களை இழிவுபடுத்தும் நிலைகள் தொடர்வதாகவும், அவர்கள் பொய்களை விவாதிப்பதும் பரப்புவதும் திகைக்க வைக்கிறது என்றும் கூறியுள்ளார்.