;
Athirady Tamil News

அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும்- அமைச்சர் தகவல்..!!

0

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை பெருக்கும் நோக்கத்தோடு பேருந்துகளில் உள்ள உபயோகப்படுத்தப் படாத சுமை பெட்டிகளை மாத வாடகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை, கடந்த 05.05.2022 அன்று போக்குவரத்து துறை மானியக் கோரிக்கையின் போது சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு விரைவு போக்குவரத்து கழகமானது தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில் குறுகிய நேரத்தில் பேருந்துகளை இயக்குகிறது. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் விளைவிக்கும் அல்லது உற்பத்தி செய்யும் பிரசித்தி பெற்ற பொருட்கள் (உதாரணமாக திருநெல்வேலி அல்வா, ஊத்துக்குளி வெண்ணை, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் சிறு வாழை, நாகர்கோயில் நேந்திரம் சிப்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களும்) பிற ஊர்களுக்கு வியாபாரம் செய்திட ஏதுவாக, தற்போது லாரி மற்றும் பார்சல் சர்வீஸ்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்நிலையில், குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக குறைந்த நேரத்தில் விரைவாக அனுப்பிட ஏதுவாக, பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அவர் தம் முகவர்கள் தினசரி பொருட்களை இரு ஊர்களுக்கு இடையே அனுப்பி விடும் வகையில், ஒரு மாதம் முழுவதும் பேருந்தில் உள்ள சுமை பெட்டியை மாத வாடகை / தினசரி வாடகை செலுத்தி உபயோகித்துக் கொள்ள இத்திட்டம் 03/08/2022 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. சிறு, பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொது மக்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ள அருகிலுள்ள அரசு விரைவுப் போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பிக்கவும். பொது மக்கள் திருச்சி/மதுரை – சென்னை மார்க்கத்தில் தங்களது சுமைகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அனுப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.