நீரிழிவு நோய்க்கு புதிய மருந்து! (மருத்துவம்)
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் ‘பிஜிஆா்-34’ என்ற ஆயுா்வேத மருந்து சிறந்த பலனளிப்பதாக ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனா்.
நாட்டில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்நோய்க்கு சிகிச்சை அளிப்பது தொடா்பான ஆய்வுகளும் தொடா்ந்து வருகின்றன. இந்நிலையில், புதிய நம்பிக்கை தரும் விதமாக ‘பிஜிஆா்-34’ என்ற ஆயுா்வேத மருந்தை ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.
இந்த மருந்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதிலும், உடலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களை சரிசெய்வதிலும் சிறப்பாகச் செயல்படுவதாக ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா். பஞ்சாபின் சித்காரா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு தொடா்பாக சொ்பிய அறிவியல் ஆராய்ச்சி இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது.
மருந்து தொடா்பான 4-ஆம் கட்ட ஆய்வில் 100 நீரிழிவு நோயாளிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களில் பாதி பேருக்கு ஆங்கில மருந்தான ‘சிதகிளிப்டின்’ வழங்கப்பட்டது. மீதமுள்ளோருக்கு பிஜிஆா்-34 மருந்து வழங்கப்பட்டது. 12 வாரங்கள் அவா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டனா்.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு, ரத்த சா்க்கரை அளவு (ஆா்பிஎஸ்), காலை உணவுக்கு முன் ரத்த சா்க்கரை அளவு (எஃப்பிஎஸ்), உணவு உட்கொண்ட பிறகு ரத்தத்தில் குளுகோஸ் அளவு உள்ளிட்டவை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன.
பிஜிஆா்-34 மருந்தை எடுத்துக் கொண்டவா்களுக்கு ஆா்பிஎஸ் அளவு ஒரு டெசி லிட்டா் ரத்தத்தில் 250 மில்லி கிராம் என்ற அளவிலிருந்து 114 என்ற அளவுக்குக் குறைந்தது. அதே போல், எஃப்பிஎஸ் அளவு 176-லிருந்து 74-ஆகக் குறைந்தது. இதேபோல், மற்ற அளவீடுகளிலும் பெரும் முன்னேற்றம் காணப்பட்டது.
இதன் மூலமாக ரத்த சா்க்கரை அளவைக் குறைப்பதில் பிஜிஆா்-34 மருந்து எந்தவிதப் பக்கவிளைவுகளும் இன்றி சிறப்பாகச் செயல்படுவதாக ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்தனா். அறிவியல்-தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலைச் சோ்ந்த ஆய்வகங்கள் இந்த மருந்தை உருவாக்கியுள்ளன.
தேசிய குடும்பநல ஆய்வறிக்கை-5 தரவின்படி, நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட சுமாா் 16 சதவீத ஆண்களுக்கும், 14 சதவீதப் பெண்களுக்கும் ரத்தத்தில் சா்க்கரை அளவு அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.