நாட்டை பொறுப்பெடுக்கத் தயாரென அநுரகுமார தெரிவித்திருப்பது வேடிக்கையானதாகும் : முபாரக் அப்துல் மஜீத்!!
நாட்டின் இன்றைய சூழலில் நாட்டை பொறுப்பெடுக்கத் தயார் என ஜேவிபி தலைவர் அநுர குமார திசாநாயக்க சொல்லியிருப்பது மிகவும் தாமதமாக ஏற்பட்ட ஞானமாகும். இந்த அறிவு எப்போதோ ஏற்பட்டிருந்தால் நாட்டின் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் ஜேவிபி வந்திருக்கும் என உலமா கட்சித் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த போது ஜேவிபியினர் அவரது கட்சியுடன் இணைந்து வரலாற்றில் முதல் தடவையாக 30க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினரை பெற்றனர். சிலர் அமைச்சர்களாகவும் இருந்தனர். அதன் பின் அவருடன் முரண்பட்டு ஆட்சியில் இருந்து விலகினர். கூட்டு சேராமல் தனித்து இயங்குவதன் மூலம் தனிக்கட்சியாக ஆட்சியை பிடிக்க முடியும் என கனவு கண்டு கடைசியில் இப்போது மூன்று எம்பிக்களுடன் உள்ளனர்.
ஒரேயொரு உறுப்பினரான ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருப்பது ஜனநாயகமா என கேட்டவர்கள் மூன்று உறுப்பினரை மட்டும் கொண்ட ஜேவிபியிடம் நாட்டை கொடுப்பது ஜனநாயகமா என கேட்டால் அதற்கு பதில் என்ன? ஜேவிபியினரின் அரசியல் என்பது நெளிவு சுளிவு அற்ற இறுகிய போக்காகும். இதற்கு காரணம் அக்கட்சியின் அரசியல் யாப்பாகும்.
நாட்டை நேசிப்பவர்களாக இருந்தால் தமது இறுக்கமான அரசியலில் இருந்து இறங்கி அனைவரையும் அரவணைத்து, சிறுபான்மை மக்களின் உரிமைகளை ஏற்றுச் செல்லும் புதிய பாதைக்கு ஜேவிபி வரவேண்டும் என அவர் கேட்டுள்ளார்.