காரைதீவு கரைவலை மீனவரின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்க சமாசம் நடவடிக்கை!!
காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த கரைவலை மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலை திட்டங்கள் குறித்து கல்முனை – அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசம் ஆராய்ந்து வருகின்றது.
நெதர்லாந்து நாட்டின் மனித நேய கூட்டுறவு சங்கத்தின் நிதி பங்களிப்பிலான ஐந்தாண்டு வேலை திட்டத்தின் கீழ் விவசாயம், வீட்டு தோட்டம், மீன்பிடி, நெசவு போன்றவை சார்ந்த சுய தொழில் முயற்சியாளர்களுக்கு சமாசம் ஆக்கமும், ஊக்கமும் வழங்குகின்றது.
காரைதீவு, நாவிதன்வெளி, கல்முனை வடக்கு, வீரமுனை, கோரக்கோயில், மல்வத்தை, மல்லிகைத்தீவு, பழைய வளத்தாப்பிட்டி, புதிய வளத்தாப்பிட்டி, அட்டப்பள்ளம், மாணிக்கமடு, திராய்க்கேணி போன்ற பிரதேசங்களில் பொருத்தமான வேலை திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு முன்னெடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன.
இதன் அடிப்படையில் சமாசத்தின் தலைவர் எஸ். லோகநாதன் இப்பிரதேசங்களுக்கு கள விஜயங்கள் மேற்கொண்ட வகையில் காரைதீவு பிரதேசத்தில் கரைவலை மீனவ உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முன்னின்று பாடுபடுகின்றார்.
இதற்கு அமைய காரைதீவில் மீனவர் சிக்கன கூட்டுறவு சங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான பூர்வீக ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழர் பிரதேசங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கூட்டுறவு துறை மூலம் மேம்படுத்த வேண்டும் என்கிற தூர நோக்குடன் மூன்று தசாப்த காலத்துக்கு முன் இச்சமாசம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.