;
Athirady Tamil News

​குஜராத் கலவர வழக்கில் மோடியை சிக்க வைக்க சோனியா காந்தி சதி- பாஜக குற்றச்சாட்டு..!!

0

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்துக்கு மறுநாள் நரோடா பாட்டியா என்ற இடத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இதில் 97 சிறுபான்மையினர் கோரமாக கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடி மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை கடந்த மாதம் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு, மோடி குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் போலி ஆவணங்களை தயாரித்து மக்களை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், குஜராத் கலவர வழக்கில் மோடியை சிக்க வைக்கும் சதியின் பின்னணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருந்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளதாவது: சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் மறைந்த அகமது படேல், குஜராத் மாநிலத்தில் பாஜக அரசை சீர்குலைக்கவும், மோடியின் அரசியல் வாழ்க்கையை சேதப்படுத்தும் வகையிலும் செயல்பட்டார். எனினும் அவர் சோனியாகாந்தியால் இயக்கப்பட்டார். சிறப்புப் புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்ட டீஸ்டா செடல்வாட், நீதிமன்றத்தின் முன் அளித்த வாக்குமூலத்தில் அகமது பட்டேல் குறித்து குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தனிப்பட்ட பயன்பாட்டிற்காக செடல்வாட் மனைவியிடம் 30 லட்சம் ரூபாய் பணத்தை படேல் வழங்கியதாக சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பணம் சோனியாகாந்தி வழங்கியது. குஜராத் கலவர வழக்குகளைத் தொடர்ந்த செடல்வாட்டிற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தேசிய ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் அவர் சேர்க்கப்பட்டார். இது குறித்து சோனியா காந்தி விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு சம்பித் பத்ரா குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.