மருத்துவ சமூகத்தை இழிவுபடுத்த முயல்வது பல மருத்துவர்களை இங்கிருந்து புலம்பெயர வைத்துவிடும் – மருத்துவர் சி.யமுனாநந்தா!!
கடினமான காலத்தில் பொதுவெளியில் மருத்துவச் சமூகத்தை இழிவுபடுத்த முயல்வது பல மருத்துவர்களை இங்கிருந்து புலம்பெயர வைத்துவிடுமென யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்தார்.
இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவச் சமூகத்திற்கான ஆதரவு எனும் தலைப்பில் மருத்துவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஊடக அறிக்கையில், எரிபொருட்களைப் பெறுவதற்காக சாதாரண பொதுமக்களுடன் மருத்துவச் சமூகமும் பாரிய நெருக்கடியினை எதிர்கொள்கின்றது. இந்நிலையில் பாரிய கடமைப் பழுவின் மத்தியிலும் எரிபொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்க அதிபரின் அனுமதியுடனான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட வைத்தியசாலை சமூகத்தினருக்கு எரிபொருள் நிரப்புவதற்கு சிலர் இடையூறாக இருந்தமையும் சமூக ஊடகங்களில் அவதூறாகவும் கருத்துக்களை உருவாக்குவதும் மிகவும் வேதனைக்குரியது.
வடபகுதியில் 1983ம் ஆண்டுகால அளவில் பல மருத்துவர்களும் மருத்துவ நிபுணர்களும் நாட்டுப்பிரச்சினை காரணமாக புலம்பெயர்ந்தனர். மிகவும் கடினமான முயற்சிகளின் பயனாகவே தற்போது யாழ் போதனா வைத்தியசாலை இலங்கையில் மிகவும் சிறந்த மருத்துவ நிபுணர்களுடன் சேவையினை ஆற்றிவருகின்றது. மிகவும் கடினமான இக்காலத்தில் பொதுவெளியில் மருத்துவச் சமூகத்தை இழிவுபடுத்த முயல்வது பல மருத்துவர்களை இங்கிருந்து புலம்பெயர வைத்துவிடும்.
இதனால் பாரிய சமூக வெற்றிடம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது போன்று ஏற்படலாம். எனவே மருத்துவ சேவையின் முக்கியத்துவத்தினை உணர்ந்து இக்கடினமான சூழலில் மருத்துவச் சமூகத்திற்கு ஆதரவு அளியுங்கள் என்றுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”