பண்பாட்டு பேரவை 10 அம்ச கோரிக்கையை முன் வைத்துள்ளது!!!
அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் செயற்பாட்டிற்கும் அனைத்து தமிழ் கட்சிகளின் பார்வைக்கும் எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை, தமிழ் மக்களுக்கான பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சு. நிசாந்தன் கோரிக்கைகளை முன்வைத்தார்.
பத்து அம்சக் கோரிக்கையில்,
சிறிலங்கா அரசினால் நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
சிறிலங்கா ராணுவத்தாலும், ஒட்டுக்குழுக்களாளும் கடத்தி காணாமலாக்கப்பட்ட தமிழ் உறவுகள் மற்றும் சிறிலங்கா ராணுவத்திடம் வலிந்து கையளிக்கப்பட்ட எமது போராளிகள், பொதுமக்கள் ஆகியோர் தற்பொழுது எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது? என்று நீதியான முறையில் பொறுப்பு கூறவேண்டும்.
பல தசாப்தங்களாக தமிழர்களை அடக்கி, ஒடுக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
சிறிலங்கா அரசினாலும், அரச இயந்திரங்களினாலும் தமிழர் தாயகப் பகுதியில் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் பௌத்த மத அடையாளங்களை உருவாக்கும் செயற்பாடுகளை உடனும் நிறுத்துவதோடு நிறுவப்பட்ட பெளத்த மத அடையாளங்களை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழர் தாயகத்தில் உள்ள எமது மக்களின் பூர்வீக காணிகளை சிறிலங்கா அரசு கையகப்படுத்தும் நடவடிக்கைகளை
நிறுத்துவதோடு கையகப்படுத்திய காணிகளை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டின் ஏனைய மாவட்டங்களைவிட வடகிழக்கில் அதிகமான ராணுவம் நிலைகொண்டுள்ளது. எனவே மேலதிகமாக காணப்படும் ராணுவத்தை எமது பகுதியைவிட்டு வெளியேற்றுவதற்கான துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழர் தாயகத்தில் அரசியல், சமூக செயற்பாடுகளை முன்னெடுக்கும் தமிழ் செயற்பாட்டாளர்கள் மீது சிறிலங்கா
புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களை உடனும் நிறுத்தி செயற்பாட்டாளர்கள் முழு சுதந்திரத்துடனும், பாதுகாப்புடனும் செயற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஊடகவியலாளர்கள் மீது சிறிலங்கா ராணுவம் மற்றும் புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களை உடனும் நிறுத்தி எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் சுயாதீனமாக, சுதந்திரமாக, பாதுகாப்பாக செயற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
வடகிழக்கு தமிழர் பகுதியில் எமது இளைஞர், யுவதிகளுக்கு அதிகமான வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கு
ஏற்றவகையில் பெரியளவிலான தொழிற்சாலைகளை விரைவில் நிறுவுவதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும்.
நீண்ட காலமாக நடாத்தப்படாமல் இருக்கும் மாகாணசபை தேர்தலை உடனடியாக நடாத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேற்படி கோரிக்கைகளை சிறிலங்கா அரசிடம் இருந்து எழுத்து மூலமான உத்தரவை அனைத்து தமிழ் கட்சிகளும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து சிறிலங்கா அரசின் வாய்மூல உத்தரவுகளை நம்பி ஏமாறும் போக்கிற்கு அனைத்து தமிழ்கட்சியினரும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”