திருப்பதியில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி ஏழுமலையான் முன்பு பஞ்சாங்கம் வாசிப்பு..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி சாமி முன்பாக வருடாந்திர வரவு, செலவு கணக்குகள் சமர்ப்பிப்பது வழக்கம். இந்த ஆண்டு ஆனிவார ஆஸ்தானம் இன்று காலை நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க ஏழுமலையானுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. இதையடுத்து சுப்ரபாதம் விஸ்வரூப தரிசனம் தோமாலை அர்ச்சனை ஆகியவை நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் சொப்பன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் வைத்து பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. அதன் பின்னர் 2021-22 ம் ஆண்டுக்கான வரவு, செலவு கணக்குகள், இருப்பு உள்ளிட்டவை வாசிக்கப்பட்டது. ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி திருப்பதி தேவஸ்தானம் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டது. மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் சர்வ பூபால வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சர்வ பூபால வாகனம் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் சார்பில் வண்ண வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. திருப்பதியில் நேற்று 84,885 பேர் தரிசனம் செய்தனர். 41211 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.35 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.