;
Athirady Tamil News

நாளை ஜனாதிபதி தேர்தல்- திரவுபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்பு..!!

0

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந் தேதி முடிகிறது. இதையொட்டி இந்தப்பதவிக்கான தேர்தல் நாளை (18-ந் தேதி) நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்து இருந்தது. ஜனாதிபதி பதவிக்கு ஆளும் கட்சியான பா.ஜனதா கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சியின் சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. பாராளுமன்ற வளாகத்திலும், அனைத்து மாநில சட்டமன்ற செயலக வளாகத்திலும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. அனைத்து எம்.பி.க்களும் (மக்களவை, மேல்சபை), எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க உள்ளனர். அதே நேரத்தில் நியமன எம்.எல்.ஏ.க்கள், சட்ட மேலவை உறுப்பினர்கள் ஓட்டு போட முடியாது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவுக்கு ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. எம்.பி.க்களுக்கு பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ.க்களுக்கு இளம் சிவப்பு நிறத்திலும் வாக்கு சீட்டு வழங்கப்படும். தேர்தல் அதிகாரி பிரிப்பதற்கு வசதியாக இரு நிறத்தில் வாக்கு சீட்டு அளிக்கப்படுகிறது. வாக்கு மதிப்பு அடிப்படையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் மதிப்பிடப்படும். ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு இந்த முறை 700 ஆக உள்ளது. எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு மாநிலத்தின் மக்கள்தொகை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 208 ஆக உள்ளது. அதை தொடர்ந்து தமிழ்நாடு, ஜார்க்கண்டில் எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 176 ஆகவும், மகாராஷ்டிரத்தில் 175 ஆகவும் உள்ளன. சிக்கிமில் 7 ஆகவும், நாகலாந்தில் 9 ஆகவும் ஓட்டு மதிப்பு உள்ளது. ஜனாதிபதி தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பாராளுமன்றத்தில் வருகிற 21-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் பா.ஜனதா கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்மு வெற்றி பெற அதிகமான வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க., தெலுங்கு தேசம், பகுஜன்சமாஜ் உள்ளிட்ட மாநில கட்சிகள் முர்முவுக்கு ஆதரவு அளித்துள்ளன. இதனால் அவர் 61 சதவீத வாக்குகளை பெறுவது உறுதியாகி விட்டது. திரவுபதி முர்மு வேட்பு மனுதாக்கல் செய்தபோது 50 சதவீத வாக்குகள் பெறுவார் என்று கணக்கிடப்பட்டது. அதன் பிறகு பிஜூ ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பகுஜன் சமாஜ், அ.தி.மு.க., தெலுங்கு தேசம், மதசார்பற்ற ஜனதா தளம், சிரோமணி அகாலி தளம், சிவசேனா, ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா ஆகிய கட்சிகள் முர்முவுக்கு ஆதரவு அளித்துள்ளன. இதனால் அவர் 61 சதவீத வாக்குகளை பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலில் மொத்த வாக்குகள் 10,86,431 ஆகும். பல்வேறு கட்சிகளின் ஆதரவுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி பெறும் வாக்குகளின் எண்ணிக்கை 6.67 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில் பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமே 3.08 லட்சம் வாக்குகள் உள்ளன. ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சிக்கு 114 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மக்களவையில் 12 எம்.பி.க்களும், மேல் சபையில் 9 எம்.பி.க்களும் உள்ளனர். இதனால் அந்த கட்சிக்கு மொத்தம் 32,000 வாக்குகள் உள்ளன. இதே போல பா.ஜனதா வேட்பாளர்கள் ஆதரவு அளிக்கும் மற்ற கட்சிகளின் வாக்குகள் உள்ளன. எதிர்க்கட்சி வேட்பாளரான யஷ்வந்த் சின்காவுக்கு எம்.பி.க்கள் மூலமாக 1.5 லட்சத்துக்கு அதிகமான வாக்குகளும், எம்.எல்.ஏ.க்கள் மூலமாக 1.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.