நயினை மத்தி விளையாட்டு கழகத்தின் தீவக ரீதியான துடுப்பாட்ட போட்டி அல்லை. சென். பிலிப்ஸ் சம்பியன்!! (படங்கள்)
நயினாதீவு சனசமூக நிலையமும் நயினாதீவு மத்திய_விளையாட்டு கழகமும் இணைந்து சின்னத்துரை ஜெகநாதன் குடும்பத்தினரின் நிதி அனுசரணையுடன் நடத்திய தீவக ரீதியான மென்பந்தாட்டத் தொடர் – 2022 மென்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஊர்காவற்றுறை இளைஞர் விளையாட்டுக் கழகத்தினை 55 ஓட்டங்களால் வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தை வென்றது அல்லைப்பிட்டி சென். பிலிப்ஸ் விளையாட்டுக்கழகம்.
நயினை மத்தி விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட மென்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று நயினை மத்தி விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றது.
இறுதிப்போட்டியில் ஊர்காவற்றுறை இளைஞர் அணியும் அல்லைப்பிட்டி சென். பிலிப்ஸ் அணியும் மோதின.
குறித்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற ஊர்காவற்றுறை இளைஞர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அல்லைப்பிட்டி சென். பிலிப்ஸ் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 96 ஓட்டங்களை குவித்தது.
துடுப்பாட்டத்தில் அல்லைப்பிட்டி சென். பிலிப்ஸ் அணி வீரர் சாள்ஸ் 58 (15 பந்துகளில்) ஓட்டங்களை அடித்து அரைச்சதம் கடந்தார்.
97 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஊர்காவற்றுறை இளைஞர் அணி 6.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 41 ஓட்டங்களை பெற்றது.
இதன்மூலம் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஊர்காவற்றுறை இளைஞர் அணியை வீழத்தி அல்லைப்பிட்டி சென். பிலிப்ஸ் அணி சம்பியனானது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”