மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கொளுத்தும் வெயில் – ஸ்பெயினில் வெப்ப அலையால் கடந்த வாரம் 84 பேர் பலி..!!
ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்டுள்ள வெப்ப அலைக்கு 84 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜூலை 10 முதல் 12 வரையிலான தேதிகளில் பதிவான அனைத்து இறப்புகளும், அதீத வெப்பத்தால் ஏற்பட்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பல பகுதிகளில் 40 டிகிரி செல்ஷியஸை தாண்டி வெப்பம் நிலவியதை அடுத்து, இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் 45 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை நிலவி வருவது தெரியவந்துள்ளது. இந்த வெப்ப அலை அடுத்த வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும், எனவே உயிரிழப்புகள் அதிகமாகலாம் என்றும் கூறப்படுகிறது. ஸ்பெயினில் இந்தாண்டில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய வெப்ப அலையாக கருதப்படுகிறது. கடந்த ஜூன் 11 முதல் ஜூன் 20ஆம் தேதி வரை ஏற்பட்ட வெப்ப அலையினால், மொத்தம் 829 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. அப்போது, அதிகபட்சமாக 44.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த கொடூர வெயிலில் இருந்த தப்பிக்க, அதிக நேரம் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாமல், அதிகளவு தண்ணீரை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், வீட்டைவிட்டு வெளியே வருவதையும் குறைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.