பாகிஸ்தானில் கராச்சியில் கனமழை; மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!
பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், சிந்த் மற்றும் பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் அதனால், நகரங்களில் வெள்ளம் ஏற்படும் என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும் என கடந்த சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்து இருந்தது என டான் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதனை முன்னிட்டு பெய்த கனமழையால், பல வீடுகள் மற்றும் கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கின. பயிர்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் சேதமடைந்தன. சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளடங்கிய பகுதிகளுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. வடகிழக்கு அரபி கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் மணிக்கு 50 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் கராச்சி நகரில் இருந்து 400 கி.மீ. தென்கிழக்கில் அது மையம் கொண்டுள்ளது என்றும் அடுத்த இரு நாட்களில் ஓமனை நோக்கி நகர்ந்து செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கனமழையை தொடர்ந்து வீட்டில் இருந்த அக்பர் கான் என்ற 50 வயது நபர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் நேற்று மாலை உயிரிழந்து உள்ளார் என உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்து உள்ளது.