மேக வெடிப்பு வெளிநாட்டு சதியால் ஏற்படுகிறது: சந்திரசேகர் ராவ்..!!
மேகவெடிப்பு பிற வெளிநாடுகளால் ஏற்படுத்தப்படும் சதியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒருவாரமாக இடைவிடாது தொடர் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தெலுங்கானாவில் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக அம்மாநிலத்தின் கோவில் நகரம் என்று அழைக்கப்படும் பத்ராசலம் பகுதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பத்ராசலத்தின் அணையின் நீரின் அளவு 70 அடியை இரு தினங்களுக்கு முன் கடந்தது. 53 அடியை நீர் மட்டம் கடந்த போது இறுதி எச்சரிக்கை விடப்பட்டது. தற்போது அணையின் நீர் மட்டம் 60 அடியாக உள்ளது. இந்த நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை தெலுங்கானா முதல் மந்திரி சந்திர சேகர் ராவ் இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சந்திரசேகர் கூறுகையில், “மேக வெடிப்பு என்று அழைக்கப்படும் புதிய நிகழ்வு ஆங்காங்கே தற்போது நிகழ்கிறது. மேக வெடிப்பு சதி செயலாக இருக்கலாம் என்று மக்கள் பேசுகின்றனர். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வேண்டும் என்றே மேக வெடிப்பை குறிப்பிட்ட சில இடத்தில் நிகழச் செய்வதாக கூறப்படுகிறது. இது எந்த அளவு உண்மை என்பதை நமக்கு தெரியவில்லை. கடந்த காலங்களில் காஷ்மீர் அருகே இது போன்று மேகவெடிப்பு நடத்தப்பட்டது. பிறகு உத்தரகாண்டிலும் நடந்தது. தற்போது கோதாவரி பகுதியில் மேகவெடிப்பை ஏற்பட செய்து வருவதாக எங்களுக்கு தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன” என்றார். குறுகிய நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிக மிக அதிக கனமழை பெய்வது மேக வெடிப்பு என்று சொல்லப்படுகிறது. அதாவது, திடீரென 100 மி.மீட்டர் (10 செ.மீ) மேல் ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் மழை கொட்டுவதை மேக வெடிப்பு என்று வானிலை ஆய்வு மையம் வரையறுக்கிறது. சமீபத்தில் அமர்நாத்த்தில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெரு வெள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.