;
Athirady Tamil News

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி- பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!!

0

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தின் முதல் நாளான இன்று ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்களவை இன்று காலை கூடியதும் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், பாலிவுட் நடிகருமான சத்ருகன் சின்கா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் பாஜகவை சேர்ந்த 2 எம்பிக்கள் உள்பட 3 புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர். இதைத்தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் ஓம்பிர்லா அனுதாபம் தெரிவித்து வாசித்தார். இதே போல மறைந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா அதிபர்களுக்கும், மறைந்த முன்னாள் எம்.பி.க்கள் 8 பேருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்கள் வாக்களிப்பதற்கு வசதியாக பிற்பகல் 2 மணி வரை சபையை சபாநாயகர் ஒம்பிர்லா ஒத்தி வைத்தார். இன்றைய முதல் நாள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிற்பகல் 2 மணிக்கு மக்களவை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியதும், இடதுசாரி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் விலைவாசி உயர்வு, பணவீக்கம் மற்றும் அக்னிபாத் திட்டம் உள்ளிட்டவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளில் ஈடுபட்டனர். இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஆதிரஞ்சன் சவுத்ரி கோரிக்கை விடுத்தார். ஆனால் அப்போது சபாநாயகர் பொறுப்பை கவனித்த ராஜேந்திர அகர்வால் அனுமதி மறுத்தார். இதையடுத்து சட்டத்துறை மந்திரி கிரண் ரஜூஜு குடும்ப நல நீதிமன்றங்கள் தொடர்பாக சட்மசோதாவை தாக்கல் செய்தார். எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி தொடர்ந்த நிலையில் மக்களவை நடவடிக்கைகளை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார். மேல்சபை கூடியதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்று கொண்டனர். தமிழகத்தை சேர்ந்த புதிய மேல்சபை உறுப்பினர்கள் பதவியேற்றனர். முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம், தி.மு.க.வை சேர்ந்த கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார், அ.தி.மு.க.வை சேர்ந்த சி.வி. சண்முகம் ஆகியோர் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். அ.தி.மு.க.வை சேர்ந்த ஆர்.தர்மர் ஏற்கனவே பதவியேற்று இருந்தார். புதிய எம்.பி.க்கள் பதவியேற்ற பிறகு எதிர் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஜி.எஸ்.டி. மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் சபையின் மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கேட்டதை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார். இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டார். இதன் காரணமாக சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 12-ந்தேதி வரை பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.