;
Athirady Tamil News

ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் ஆதார் கட்டாயம்- மத்திய அரசு நடவடிக்கை..!!

0

சட்ட விரோதமாக பண பரிவர்த்தனைகள் நடப்பதை கண்காணிக்கவும், தடுக்கவும் வருமான வரித்துறை அவ்வப்போது கிடுக்கிப்பிடி போட்டு வருகிறது. வங்கிகளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் ‘பான்கார்டு’ கட்டாயமாக இருந்து வருகிறது. அதேநேரம் ஆண்டுக்கு உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் இப்போது புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் பணபரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குடன் பான் மற்றும் ஆதார் எண் இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையின் படி வங்கிகளில் ஒரே நேரத்திலோ அல்லது பல முறையோ, ஒரே வங்கியிலோ அல்லது பல வங்கிகளிலோ ஒரே கணக்கில் ரூ.20 லட்சத்துக்கு மேல் பணம் பரிவர்த்தனை செய்வது கண்காணிக்கப்படும்.

பண மோசடி, சட்ட விரோத பண பரிவர்த்தனைகள் மற்றும் நிதி தொடர்பான குற்றங்களை கட்டுப்படுத்த கடந்த சில ஆண்டுகளாக எடுத்து வரும் தொடர் நடவடிக்கையின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரொக்கமாக பணம் பரிமாறுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ரூ. 2 லட்சத்துக்கும் மேல் எந்த காரணத்துக்காகவும் ரொக்கமாக பணம் பரிமாற்றம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக ரூ. 3 லட்சத்துக்கு நகையோ, பொருட்களோ வாங்க நேர்ந்தால் செக், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, அல்லது வங்கி மூலமே பணம் செலுத்தப்பட வேண்டும்.

நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் ஒரே நேரத்தில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பெற்றுக்கொள்ள முடியாது.

ஒருவரிடம் இருந்து ஒரே நேரத்தில் ரூ. 2 லட்சம் அல்லது அதற்கு மேல் பரிசாக பணத்தை பெறுவது குற்றம். அதற்கு அபராதம் விதிக்கப்படும். வரி செலுத்துபவர்கள் ஹெல்த் இன்ஷ்யூரன்சுக்கு பணமாக தவணை தொகையை செலுத்தினால் 80டி-யின் கீழ் வரி கழிவு பெற முடியாது.

வங்கிகள் மூலம் செலுத்தினால் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். நிறுவனங்களுக்கு செலுத்துவதற்கோ, நண்பர்களுக்கு கொடுக்கவோ ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக எடுத்து செல்லக்கூடாது. வங்கிகள் மூலமாகவே கொடுக்கப்பட வேண்டும்.

சொத்துக்கள் வாங்குவது, விற்பது போன்றவற்றிலும் பணமாக கொடுக்க ரூ.20 ஆயிரம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுய தொழில் செய்து வரி செலுத்தியவர்கள் ஒரு நபருக்கு ஒரு நாளில் செலவினமாக ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணமாக கொடுத்தால் வரி சலுகை கோர முடியாது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.