உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.வரி விதிப்பு மக்களை பாதிக்கும்- வருண்காந்தி விமர்சனம்..!!
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பேக் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 25 கிலோவிற்கும் குறைவான எடையுள்ள பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட அரிசி, தானியங்கள், பருப்பு வகைகள், இறைச்சி, மீன், தேன், உலர்ந்த காய்கறிகள், உலர்ந்த மக்கானா, கோதுமை மாவு தயிர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று முதல் வசூலிக்கப்படுகிறது. இதனால் இந்த பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ஆளும் பா.ஜ.க எம்.பி வருண் காந்தி விமர்சித்துள்ளார். இது ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதிக்கும் என்று தமது டூவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முடிவு நடுத்தரக் குடும்பங்களுக்கு, குறிப்பாக வாடகை வீடுகளில் வாழும் இளைஞர்களுக்கு அதிக நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ள வருண்காந்தி, அவர்களுக்கு நிவாரணம் தேவைப்படும் நேரத்தில் நாங்கள் அவர்களைத் துன்புறுத்துகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.