இலங்கை ஜனாதிபதி தேர்தல் களத்தில் மூன்று வேட்பாளர்கள் – யாருக்கு வெற்றி சாத்தியம்? (படங்கள்)
இலங்கையில் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கு, புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான தீர்மானமிக்க வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (ஜூலை 20) முற்பகல் நடைபெறவுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர்கள், இன்று தமது வேட்பு மனுவை, நாடாளுமன்ற பொதுச் செயலாளரும், ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பின் தெரிவத்தாட்சி அதிகாரியுமான தம்மிக்க தஸநாயக்கவிடம் கையளித்தனர்.
இதற்கமைய, இலங்கையில் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்காக மூன்று வேட்பாளர்களின் பெயர்கள், நாடாளுமன்றத்தில் இன்று (19) முன்மொழியப்பட்டன.
வேட்பு மனு தாக்கலுக்காக நாடாளுமன்ற கூட்டத் தொடர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று கூடிய போதே இந்த பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இதன்படி, தற்போதைய பதில் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெருமவின் பெயரை, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிந்ததுடன், அதனை ஜீ.எல்.பீரிஸ் வழிமொழிந்தார்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரை, அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்மொழிந்ததுடன், அதனை அமைச்சர் மனுஷ நாணயக்கார வழிமொழிந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் முன்மொழிந்ததுடன், அதனை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய வழிமொழிந்தார்.
இந்த நிலையில், ஜனாதிபதி தேர்வுக்கான இரகசிய வாக்கெடுப்பு புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என்று சபையில் அறிவிக்கப்பட்டது.
போட்டியிடாமலேயே களத்தில் இருந்து விலகிய சஜித்
இதற்கு முன்னர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட எதிர்பார்த்திருந்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார்.
எனினும், பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ராஜபக்ஷ குடும்பத்தை தலைமைத்துவமாக கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெருமவிற்கு தமது ஆதரவை வழங்கியுள்ளது.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பதில் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவிற்கு, ராஜபக்ஷ குடும்பத்தை தலைமைத்துவமாக கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தமது ஆதரவை வழங்கியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கவிற்கு, தற்போது அந்த கட்சி மாத்திரமே ஆதரவை வழங்கியுள்ளது.
அத்துடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, எந்தவொரு வேட்பாளரும் ஆதரவு வழங்காது. நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளிலிருந்து வெளிநடப்பு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
மெளனம் காக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து இதுவரை தீர்மானத்தை எட்டவில்லை.
மேலும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன இன்று வரை சஜித் பிரேமதாஸவுடனேயே கூட்டணியாக செயற்பட்டு வருகின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளின் தீர்மானத்தை தாமும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியூதீன் தெரிவிக்கின்றார்.
ஐக்கிய மக்கள் சக்தி, டளஸ் அழகபெருமவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அதன் கூட்டணி கட்சியாக செயற்படும் தாமும் அதற்கு ஆதரவாக இருப்பதாக அவi; கூறுகின்றார்.
நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் இதுவரை தமது நிலைப்பாட்டை வெளிபடையாக அறிவிக்காத நிலையில், சில கட்சிகள் மாத்திரமே நிலைப்பாட்டை அறிவித்துள்ளன.
எம்பிக்கள் கருத்து
ஜனாதிபதியை தேர்வு செய்வது தொடர்பில், சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிபிசி தமிழ் பேசியது.
ஐக்கிய மக்கள் சக்தியின் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில், ”மக்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு நாங்கள் ஒற்றுமையாக செயற்படுகின்றோம். தலைசிறந்த நோக்காக கொண்டு செயற்படுகின்ற அரசாங்கமொன்று தேவைப்படுகின்றது. அதனால், எந்தவித பிரச்சினையும் கிடையாது. நாங்கள் பொதுவான நிகழ்ச்சி நிரலொன்றை நடைமுறைப்படுத்துகின்றோம். போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் மற்றும் பொதுமக்கள் கடந்த காலங்களில் வெளியிட்ட பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன. 19வது திருத்தம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை கூற வேண்டும். அந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, ஒன்றிணைந்த திட்டமொன்றை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதனாலேயே இந்த தீர்மானத்தை எடுத்தோம். உறுதியாக நாங்கள் ஒத்துழைப்புடன் செயற்படுவோம். நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம். அதனை தெரிந்துக்கொண்டே நாங்கள் இந்த விடயத்தில் களமிறங்கினோம்,” என தெரிவிக்கின்றார்.
இந்த போட்டியில் களமிறங்கியுள்ள டளஸ் அழகபெரும, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருவர் என்பதுடன், பதில் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே ஆதரவு வழங்கி வருகின்றது.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் சந்திம வீரக்கொடி, ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துரைத்தார்.
”மக்கள் எதிர்நோக்குகின்ற ஒன்று இருக்கின்றது. மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை நிறைவேற்றக்கூடியவர்களின் கொள்கைகளை கொண்டவர் யார் என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம். மக்கள் எதிர்பார்க்காத ஒரு விடயத்தை நடைமுறைப்படுத்த நாம் ஆதரவு வழங்க போவதில்லை” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவிக்கின்றார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல்
டளஸ் அழகபெரும, ஜனாதிபதி பதவியை ஏற்கும் பட்சத்தில், சஜித் பிரேமதாஸ பிரதமராக பதவியேற்பார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவிக்கின்றார்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தி தமது வேட்பாளர் ஒருவரை களமிறக்கியமை குறித்து, அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
”மொட்டு கட்சியினர் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள ஒருவரை முன்மொழிந்தனர். அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள், மொட்டு கட்சியுள்ளவர்களை முன்மொழிந்தனர். அவர்கள் அவ்வாறே பிரித்துக்கொண்டார்கள். எனினும், நாட்டு மக்கள் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. நாங்கள் மக்களின் எண்ணத்துடன் தற்போதே வெற்றி பெற்று விட்டோம்” என விஜித்த ஹேரத் தெரிவிக்கின்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு கட்சி) மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளமையினால், சிஸ்டம் சேஞ்ச் நாட்டில் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான அருண் ஆரோக்கியநாதன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
”எதை செய்தேனும், ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணமே இங்கு காணப்படுகின்றது. எனினும், இறுதியாக இவர்கள் எதிர்பார்க்க சிஷ்டம் சேர்ன்ஜ் இதுவா என்ற கேள்வி எழுந்து நிற்கின்றது. மொட்டு கட்சியின் விஞ்ஞானபனங்கள் தோல்வி அடைந்துள்ளது, இனி மொட்டு கட்சிக்கு வர முடியாது என சஜித் பிரேமதாஸ கூறி வந்தார். ஆர்ப்பாட்டக்காரர்களும் அதே விடயத்தை கூறி வந்தார்கள்.
எனினும், ரணில் விக்ரமசிங்க என்ற தனி நபரை தோற்கடிப்பதற்காக இன்று அனைவரும் கைக்கோர்க்கின்றார்கள் என்று சொன்னால், அது ஒரு தனிநபரின் ஆளுமை மீதான அச்சமா? இல்லையென்றால், அரசியல் காழ்ப்புணர்வா? என்ற கேள்வி எழுகின்றது.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றது. இந்த பொருளாதார நெருக்கடி தொடர்பிலான பூரண அறிவும், தூர பார்வையும் கொண்ட ஒருவர் இருந்தால் தான் நல்லது. நெருக்கடியான நேரத்தில் வலுவான தலைவர் ஒருவரே இருக்க வேண்டும்.
போராட்டக்காரர்கள் இந்த சந்தர்ப்பத்தில் நல்ல விடயங்களை சாதித்தார்கள். இதையடுத்து, தாங்கள் சொல்வதை எல்லாம் கேட்ககூடிய ஒரு தலைவர் தான் இருக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் எண்ணுகின்றார்களா?
ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்தால், அவர்கள் கூறுவதை இவர் செவிமடுக்க மாட்டார் என்று யோசிக்கின்றார்களா? இப்படியே போனால், போராட்டக்காரர்கள் எதிர்காலத்தில், அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் தலையீடு செய்ய முயற்சிப்பார்கள்.
ஒவ்வொன்றுக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைமை ஏற்படும். யாருக்கும் நிம்மதியாக ஆட்சி செய்ய முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். அரசாங்கம் மக்களுக்கு பொறுப்பு கூறும் வகையில் இருக்க வேண்டும்.
ஆனால் அரசாங்கத்திற்கு பிரதிநிதிகளை நியமித்ததற்கு பிறகு, எந்த நேரமும் மக்களை கேட்டு கேட்டு முடிவுகளை எடுக்கக்கூடாது. நெருக்கடிகளை நாடு சந்திக்கும் போது, தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும். அது தான் உண்மையான தலைமைத்துவத்திற்கு அழகு. வேண்டாம் என கூறிய இடத்திலேயே தற்போது சென்றிருக்கின்றார்கள்.
மீண்டும் மொட்டு கட்சியே ஆதிக்கம் செலுத்த போகின்றது. அப்படி ஒன்றால், சிஸ்டம் சேஞ்ச் அங்கு இருக்கின்றது.” என மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான அருண் ஆரோக்கியநாதன் தெரிவிக்கின்றார்.