;
Athirady Tamil News

ராணுவ வீரர்கள் தேர்வுக்கு சாதி கேட்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு- ராஜ்நாத்சிங் மறுப்பு..!!

0

அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு வீரர்களை தேர்வு செய்யும்போது சாதி சான்றிதழ் கேட்கப்படுவதாக ஆம்ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய்சிங், ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்பி உபேந்திர குஷ்வாஹா மற்றும் பாஜக எம்பி வருண் காந்தி ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பான ஆவணத்தையும் அவர்கள் டுவிட்டர் பதிவில் வெளியிட்டனர். இந்த பிரச்சினை பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்டது. ராணுவ ஆள்சேர்ப்பில் இடஒதுக்கீடு வழங்காத நிலையில் ஜாதிச் சான்றிதழ் தேவையா என ஐக்கிய ஜனதாதளம் எம்பி குஷ்வாஹா கேள்வி எழுப்பினார். ராணுவத்தின் விதிமுறைகளை மாற்றுவதன் மூலம் நமது தேசிய பாதுகாப்பில் ஏற்படும் பாதிப்பை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும், என்று அவர் கூறினார். இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், ராணுவ வீரர்கள் தேர்வில் சாதி பார்க்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஒரு வதந்தி என்று கூறினார். சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நடைமுறையே தற்போதும் தொடர்கிறது என்றும், இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் அரசியல் செய்து, ராணுவத்தை இழிவுபடுத்தி அவமதிப்பதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ராணுவ ஆட்சேர்ப்பில் சாதி அல்லது மதத்திற்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், இதற்கு பதிலளிக்கும் வகையில் ராணுவம் சார்பில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.